அத்தியாயம் – 21 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

முதல் கலீஃபா

நபிகளாருக்கு பிறகு அந்த மக்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வதற்கு சரியான ஒருவரைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே மக்கள் எல்லாம் கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். அங்கு சென்றனர் உமர் (ரலி) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும்.

அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களை கலீபாவாக முன்மொழிந்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அங்கிருந்த மக்களிடத்திலே.. “அபூபக்கருக்கு முன்பாக இமாமாக நின்று தொழ வைக்க உங்களுக்கு யாரால் முடியும்?” என்று கேட்டார்கள்.

அங்கிருந்த அனைவரும் “எங்களால் முடியாது என்றார்கள்”. காரணம்..

நபியவர்கள் அனைத்து விஷயத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்களையே முன்னிலைப்படுத்தினார்கள். நபிகளார் உடைய அத்தனை ஆபத்தான நேரங்களிலும் உடன் இருந்தவர்கள், தன்னுடைய சொத்துக்களை இதற்காகவே அர்ப்பணித்தவர்கள்.

நபியவர்கள் நோய்வாய் பட்ட கடைசி இரண்டு நாட்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைத் தான் மக்களுக்கு தொழ வைக்கச் சொன்னார்கள். பல நேரங்களில் நபியவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைப் பற்றி சிலாகித்து பேசியுள்ளார்கள். ஆகவேதான் கலீபாவாக எல்லோரையும் விட அதிக தகுதி இருந்ததை அனைவரும் அறிந்திருந்தனர்.

உடனடியாக உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கரை நான் கலீபாவாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

உடனடியாக அங்கிருந்து அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு அரபு உலகின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் பதவியேற்றார்கள்.

அந்த பதவி என்பது முள்மீது அமர்வது போன்றது அத்தனை சவால்கள் நிறைந்திருந்தது.

ஒரு பக்கம் எதிரிகள், இன்னொரு பக்கம் நயவஞ்சகர்கள் இவர்களையெல்லாம் சமாளித்து நபிகளார் கொண்டு வந்த அந்தப் பாதையில் தொடர வேண்டும். மார்க்கத்தை போதிக்க வேண்டும், மக்களுக்கு நபிகளார் காண்பித்த வழியில் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

காலணி நாடுகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிரேக்கர்களுக்கு அடுத்து ரோமர்களும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களுமே உலகை அடக்கி ஆண்டார்கள்.

இவர்கள் எந்த நாட்டை எல்லாம் பிடிக்கிறார்களோ! அந்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இவர்களுக்கு அடிமையாவார்கள். எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவிப்பார்கள். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை இவர்கள் தனது அடிமை நாடுகளாக மாற்றி இருந்தார்கள்.

அப்படி நபிகளார் காலத்தில் ரோமர்கள், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை தங்கள் கட்டுப்பாடுகளில் வைத்திருந்தார்கள். நபிகளார் மரணிக்கும் முன்பாகவே அவர்களிடமிருந்து அரபு நாட்டின் பல பகுதிகளை விடுதலை செய்திருந்தார்கள். அந்தப் பணியைத் தான் தொடர்ந்து இனி செய்ய வேண்டும், கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள்.

குணத்தில் மென்மையாகவும் அதே நேரத்தில் நபிகளார் உடைய கொள்கை விஷயங்களில் கண்டிப்பானவராகவும் இருந்தார்கள் முதல் கலிஃபா.

நபிகளார் இறந்து விட்டார்கள் இனி என்ன வேணாலும் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு எதிரிகளும் நயவஞ்சகர்களும் வந்தார்கள். அதேபோல மக்களில் சிலரும் இனி ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்றும் சொன்னார்கள். அதேபோல “நான் நபி” என்று இருவர் ஏமாற்ற அவர்கள் பின்னாடியும் சில மக்கள் இருந்தார்கள்.

இதையெல்லாம் ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்து 11 படை பிரிவுகளை உருவாக்கினார்கள். அவர்களைக் கொண்டு அரபு நாட்டை சுற்றி எழுந்திருந்த இது போன்ற குழப்பங்களை ஒடுக்கினார்கள். நபிகள் போய்விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்தது.

மீண்டும் மிக சக்தி வாய்ந்த படையாக கலிஃபாவின் தலைமையில் இஸ்லாமிய படை நின்றது.

இப்படி குழப்பங்களை எல்லாம் ஒழித்து விட்டு மீண்டும் சக்தி வாய்ந்த ஒரு அரபு உலகை அமைத்த முதல் கலீஃபா அவர்கள். பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளிலேயே மரணித்தும் விட்டார்கள்.

தன் உயிரினும் மேலாக கருதிய நபிகளாரின் “சொல், செயல், அங்கீகாரம், அதைத் தாண்டி எதையுமே நான் செய்ய மாட்டேன்” என்ற பிடிவாத குணம் கொண்டவர்கள்.

ஒரு முறை நபிகளார் உடைய கடைசி மகள் பாத்திமா (ரலி) அவர்கள். கலீபாவிடம் கேட்டார்கள்..

“எனது தந்தை விட்டுச் சென்ற சொத்தில் எனக்கும் பங்கு தற வேண்டும்” என்றார்கள்.

அதற்கு கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்ன வார்த்தை…

 “நீங்கள் என் மகளைப் போன்றவர் ஆனாலும் நபிகளார்ச் சொல்லி உள்ளார்கள், நபிமார்கள் விட்டுச்செல்லும் சொத்துக்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று. ஆகவே நபிகளார் உடைய வார்த்தைகளை மீறி நான் எப்படி நடப்பது” என்று கேட்டார்கள்.

நபிகளார் மரணித்த அடுத்த ஆறு மாதத்திற்குள் பாத்திமா ரலி அவர்களும் நோய்வாய் பட்டார்கள். அவர்களை சந்திக்க சென்ற கலீபா அவர்கள் அவரிடம் அப்பொழுதும் சொன்னார்கள்…

“என் குடும்பத்தார்களை விட உங்களை நான் அதிகம் நேசிக்கிறேன். நபிகளாரிடம் இருந்து அந்த வார்த்தைகளை நான் செவியுறவில்லை என்றால்.. அனைத்தையுமே நான் உங்களிடம் தந்து விடுவேன்” என்றார்கள்.

இருவருமே நபிகளார் உடைய வார்த்தைகளை மீறி நடக்காதவர்கள். அதைத் தொடர்ந்து பாத்திமா (ரலி) அவர்களும் இறந்து விட்டார்கள்.

அதுபோல நபிகளார், வஹியாக வந்த குர்ஆனை  நிறைய நபி தோழர்களை மனனம் செய்யச் சொன்னார்கள். குர்ஆனை எழுதி வைக்கவும் சொன்னார்கள். ஆகவே மரப்பட்டைகளிலும் தோள்களிலும் குர்ஆனை நபிகளார் பார்வையிலேயே எழுதியும் வைத்தார்கள்.

இன்று அரபு எழுத்து வடிவங்களில் மாற்றம் வந்திரந்தாலும், குர்ஆன் ஒலி வடிவத்தில் எப்படி அன்று இருந்ததோ? அப்படியேதான் இன்றளவும் ஒலிக்கப்படுகிறது.

உலகின் அதிகமாக மனனம் செய்யும் நூல் குர்ஆன் ஆகும். உலகில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களும் குர்ஆனின் சில பகுதியையாவது மனனம் செய்திருப்பார்கள்.

அன்றும் நிறைய நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆனால் அவர்களின் பல பேர் நயவஞ்சர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள். இப்படி மனனம் செய்தவர்கள் குறைவதைக் கண்ட உமர் ரலி அவர்கள். கலீபாவிடம் கூறினார்கள் குர்ஆனை ஒன்று திரட்டி ஒரே புத்தகமாக திரட்டி விட வேண்டும். என்று கோரிக்கை வைத்தார்கள்.

அப்போதும் கூட அபூபக்கர் ரலி அவர்கள் “நான் எப்படி நபிகளார் செய்யாத ஒன்றைச் செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார்கள்.

ஆனாலும் உமர் ரலி அவர்கள் விடாமல் அதனுடைய நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்து ஒன்று திரட்ட ஒப்புதல் வாங்கினார்கள்.

அதற்குப் பிறகு, நபியவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு நியமிக்கப்பட்ட ‘ஸைது பின் ஃதாபித்’ (ரலி) அவர்களின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு, குர்ஆனை மனனம் செய்தவர்களின் முன்னிலையில் எலும்பு, தோல், பட்டைகளில் எழுதியிருந்த அனைத்து எழுத்துப் பிரதிகளும் ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டது. இப்படி மிகவும் சிறப்பாக செயல்பட்ட கலீஃபா அபுபக்கர் ரலி அவர்கள் இறப்பதற்கு முன் “எனக்குப் பிறகு உமரை நீங்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு இறந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *