அத்தியாயம் – 23 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

உமர் (ரலி) அவர்கள் மரணம்

பள்ளியில் காலை பஜ்ருடைய நேரத்தொழுகை (சூரியன் உதிக்கும் முன்) தொழ வைப்பதற்காக தயாராகி தொழுகை ஆரம்பித்த உடன், அங்கே முஸ்லிம்கள் போல் நின்ற ஒரு பாரசீகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இமாமாக நின்று தொழ வைத்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களை ஆறு முறை குத்தினான்.

இலேசான வெளிச்சத்தில் ‘என்ன நடக்கிறது’ என்று யூகிப்பதற்குள் அவன் கத்தியை கொண்டு சரமாரியாக தொழுகையில் வரிசையாக நின்று கொண்டிருந்த 13 பேர்களை குத்தி கிழித்திருந்தான்.

தொழுகையில் பின்புறம் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் என்ன நடக்கிறது? என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ஏழு பேர்கள் இறந்தார்கள்.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அங்கு இருந்தவர்கள் அவனை பிடித்ததும் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டான்.

கீழே சரிந்த உமர் ரலி அவர்கள் “யார் அவன்?” என்று கேட்டார்கள்.

இன்னாருடைய வேலைக்காரன் தான் என்பதை அறிந்து கொண்டார்கள். பிறகு சொன்னார்கள்…

“நான் அவனுக்கு நன்மையை தானே செய்திருந்தேன்” என்றார்கள்.

அவனுடைய முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடந்த பிரச்சனையில் சுமூகமாக அதை முடித்து வைத்தார்கள். அதில் கோபம் கொண்ட அந்த மஜுஸி(நெருப்பை வணங்குபவன்) இந்த காரியத்தை செய்தான். ஒரு சின்ன பிரச்சனை கலீஃபாவை பலி வாங்கியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்கள் உயிரோடு இருந்தார்கள். அந்த மூன்று நாட்கள் நபிகளார் காட்டித் தந்த வழியில் அந்த மக்களுக்கு கொடுத்த அந்த நீதி உலக ஆட்சியாளர்கள் அனைவருக்கும் பாடமாக இருந்தது.

உமர் ரலி அவர்களுக்கு பால் அருந்த கொடுத்தார்கள். அது கிழிக்கப்பட்ட குடலின் வழியாக ரத்தமும் பாலாக வெளியேறியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு இளைஞர் உமர் ரலி அவர்களை சந்திக்க வந்தார்.

அவருடைய ஆடை தரையை இழுத்துக் கொண்டு வந்தது. அதை கவனித்த கலீஃபா அவர்கள்

“இளைஞரே உங்களது ஆடையை உயர்த்தி கட்டுங்கள் இது உங்கள் ஆடைக்கும் தீமை, நீங்கள் கொண்டுள்ள கொள்கைக்கும்(ஈமான்)தீமை” என்றார்கள்.

அந்த சூழலிலும் கூட ஒரு இளைஞர் செய்யும் தவறை திருத்தவே முனைந்தார்கள்.

தான் மரணித்து விடுவேன் என்பதை அறிந்து கொண்ட அவர்கள், மதினா பள்ளியின் அருகிலேயே நபியவர்களின் வீடு இருந்தது அங்கே தான் நபி அவர்களை அடக்கம் செய்தார்கள்.

முதல் கலீபாவான அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையும் அங்கேயே தான் அடக்கம் செய்தார்கள். அதற்கு பக்கத்திலேயே தன்னையும் அடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அந்த வீடு ஆயிஷா (ரலி) அவர்களுடையது.

ஆகவே தன்னை அடக்குவதற்கு இடம் தர வேண்டும் என்று தன் மகனான அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘இடம் தருகிறார்களா?’ என்று கேட்டு வர அனுப்பினார்கள்.

அனுப்பும்போது தன் மகனிடம் சொன்னார்கள் “மகனே நீ அவர்களிடம் கலீஃபா கேட்டார்கள் என்றுச் சொல்லக்கூடாது. என்னுடைய தந்தை உமர் கேட்டார் என்று தான் நீ சொல்ல வேண்டும். அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே என்னை நீங்கள் அங்கே அடக்க வேண்டும் இல்லையென்றால் பொது மையவாடியில் தான் என்னை அடக்க வேண்டும்” என்றார்கள்.

10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த அனைவராலும் விரும்பப்பட்ட உமர் ரலி அவர்கள் அத்தனைப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் எங்கேயும் நீதி தவறி விடக்கூடாது! என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். 

‘கலீஃபா கேட்டார்கள்’ என்றால் அதிகாரமாக போய்விடும் என்பதால்… ‘எனது தந்தை உமர் கேட்டார்’ என்று சொல்லச் சொன்னார்கள்.

அதேபோல அடுத்த கலீஃபாவாக ஒருவரை முன் முன்மொழிய வேண்டும். இங்குதான் உலகத்தில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

நபிகளார் ஒரு முறை 10 பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்றார்கள். அந்த பத்து பெயர்களில் இரண்டு கலீபாக்கள் மற்றும் இரண்டு பேர் இறந்தும் விட்டார்கள். மீதம் ஆறு பேர் இருந்தார்கள்.

“அவர்களுள் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

நபிகளார் யாரையும் முன்மொழியாமல் இறந்து விட்டார்கள், அபூபக்கர் ரலி அவர்கள் ஒருவரை முன்னிலைப்படுத்தினார்கள், உமர் ரலி அவர்கள் ஆறு பேர்களை காண்பித்து அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

மக்கள் அனைவரும் அடுத்த ஒருவர் யார் என்பதை தெரிந்து இருந்ததால் அபூபக்கர் அவர்களைத் ஏற்றுக்கொண்டார்கள். பிறகு உமர் அலி அவர்களை முதல் கலிப்பா சொன்ன போது அனைத்து மக்களுக்கும் அது சரியாகப் பட்டதால் அதை ஏற்றுக் கொண்டார்கள். உமர் ரலி அவர்களும் ஆறு பேர்களில் ஒருவர் இருந்தால் நன்மை என்று சுட்டி காட்டினார்கள் அதன்படி ‘மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்’.

நபிகளாரால் மிகவும் பாராட்டு பெற்ற, சிறு வயது முதல் கூடவே இருந்த உமர் ரலி அவர்களின் மகன் இப்னு உமர் அங்கே இருந்தார்கள். மிகச் சிறப்பான அறிஞர் நபிகளார் கூடவே இருந்தவர். தனது தந்தையின் 10 ஆண்டுகால ஆட்சியில் பங்கெடுத்தவர் ஒரு ஆட்சியாளருக்கு உண்டான அத்தனை தகுதியும் உமர் ரலி அவர்களின் மகன் இப்னு உமர் அவர்களுக்கு இருந்தது ஆனாலும் மகனை முன்னிலைப் படுத்தாமல் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி உமர் ரலி அவர்கள் கூறியது உலக ஆட்சியாளர்களுக்கு படிப்பினையாக உள்ளது.

எந்த காலத்திலும் “உமர் அநீதம் இழைத்து விட்டார்” என்று வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

கிபி 644 ஆம் ஆண்டு இறந்தார்கள். அந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமிய நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தது. ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகள், ஜோர்டன், பாலஸ்தீன் போன்ற பெரும்பாலான பகுதிகளை உமர் ரலி அவர்கள் ஆட்சி செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *