வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
——————————————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4 அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8 அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16 அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20 அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23
——————————————————————————————
மூன்றாவது கலீஃபா
உமர் ரலி அவர்கள் ஆசைப்பட்டது போல அவர்களின் தோழர்களான நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்களின் பக்கத்தில் இவர்களும் அடக்கம் செய்ய ஆயிஷா ரலி அவர்கள் அனுமதி கொடுத்ததால் அங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள். அது இன்றைய மதினா பள்ளிவாசலின் வளாகத்திற்கு உள்ளேயே அமைந்துவிட்டது.
தற்போது மூன்றாவது கலிஃபாவை தேர்ந்தெடுக்க சபைக் கூடியது. உமர் ரலி அவர்கள் கூறியது போலவே ஆறு பேரும் அங்கே கூடியிருந்தார்கள். அதில் மூன்று பேர் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், உஸ்மான், அலி (ரலி) ஆகிய மூவர் தங்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூவரில் மூத்தவரான அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடம் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்க பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் இருவரிடமும் தனித்தனியாக பேசிவிட்டு இறுதியாக “உஸ்மான் அவர்களை மூன்றாவது கலீஃபாவாக தேர்ந்தெடுக்கிறேன்” என்று முன்மொழிந்தார்கள். அதை அலி(ரலி) அவர்கள் வழிமொழிய அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இவர்களின் ஆட்சி 13 ஆண்டுகள் இருந்தது. மிகச் சீரும் சிறப்புமாக முந்திச் சென்ற மூன்று பேரையும் ஒருங்கிணைத்த ஒரு ஆட்சியை வழங்கினார்கள்.
இரண்டாவது கலீபாவின் மரணத்திற்குப் பிறகு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளர்ச்சியாளர்கள் தோன்றினார்கள். மார்க்கத்திற்கு முரண்பாடான கொள்கைகளை பேசி வந்தார்கள். மென்மையான குணம் கொண்ட கலிஃபா அவர்கள். அதையெல்லாம் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. அதுவே அவர்களின் உயிரையும் குடித்தது.
இவர்களின் ஆட்சியின் போது தான் குர்ஆன் பிரதி எடுக்கப்பட்டது. பறந்து விரிந்திருந்த சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் ஆளுநர்கள் இருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குர்ஆன் தேவைப்பட்டது. ஆகவே தான் குர்ஆன் பிரதி எடுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொடுத்து அனுப்பப்பட்டது. அந்தப் பிரதிகள் இன்றளவும் பல இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மிகச் சிறந்த ஆட்சியை அவர்கள் நடத்தி வந்தாலும் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏனோ கடுமையாக்காமல் இருந்து விட்டார்கள்.
சூழ்ச்சியாளர்கள் இரண்டு விஷயத்தை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
ஒன்று “ஆட்சி நபிகளாருடைய வாரிசுகளுக்குத் தான் சொந்தம்”.
இரண்டாவது “உஸ்மான் தனது சொந்தக்காரர்களுக்கெல்லாம் பதவியை வழங்கி விட்டார்” என்று.
மென்மையான ஆட்சியாளர்களை மக்களுக்கு பிடிக்காமல் அவர்களுடைய ஆட்சி மிகக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு சலித்து விடும்! என்பதற்கு உஸ்மான் ரலி அவர்களே சாட்சியாக இருந்தார்கள். உலகத்தில் புரட்சிகள் எல்லா பகுதிகளிலும் வெடிப்பதுண்டு.
சில புரட்சிகள் நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தலைவர்கள் வழிநடத்த மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து வாழவைக்கும்.
ஆனால் பெரும்பாலான புரட்சிகள் சூழ்ச்சியாளர்களின் பிடியினில் இளைஞர்கள், விட்டில் பூச்சிகளைப் போன்று விழுந்து நாசத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. இப்படி எது உண்மை எது பொய் என்று யூகிக்க முடியாத இளைஞர்களால் பல நாடுகள் காணாமலே போய்விட்டது அல்லது மீண்டு வர மூன்று தலைமுறைக் காலங்கள் எடுத்துக் கொண்டது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இக் காலகட்டத்திலும் கூட பலவிதமான புரட்சிகளை பார்த்து விட்டோம். நன்றாக போய்க் கொண்டிருக்கக்கூடிய ஒரு நாட்டை புரட்சியின் வாயிலாக துண்டாக்கி பிறகு அந்த நாடுகள் பசி, பஞ்சம், பட்டினி என்று மீள முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டதையும் பார்க்கிறோம்.
“ஆட்சியாளர் சரியில்லை வாரிசு முறையில் ஆட்சியை நடத்துகிறார்” என்று கூறி புரட்சியை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியாக பொருளாதாரத்தில் மேலோங்கி வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாட்டை சீர்குலைத்து உலகின் ஏழை நாடுகளுக்களின் பட்டியலில் தள்ளியதையும் பார்க்கிறோம்.
ஆக இளைஞர்களுக்கு திடீர் திடீரென்று ஏற்படக்கூடிய இந்த சிந்தனைகள் மிகப்பெரிய மாற்றங்களை அல்லது ஏமாற்றங்களை ஏற்படுத்தி சீரழித்து விடும் என்பதை உலகப்போர்கள் கூட சாட்சியாக நிற்கிறது.
அப்படிதான் மதினாவில் நிகழ்ந்தது. நபிகளார் காலத்திலிருந்து இந்த மூன்று கஃலீப்பாக்களுடைய காலங்களிலும் ஆட்சியை நிர்வகிப்பதற்காக பல பகுதிகளுக்கும் நபிகளாருடைய தோழர்களை அனுப்பி இருந்தார்கள். ஆகவே மிகச்சிலரை தவிர மதினாவில் இருந்த அந்த தோழர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறி விட்டார்கள்.
ஆனால் பாரசீக பகுதிகளிலிருந்தும் ஏமான் போன்ற பகுதிகளில் இருந்தும் நிறைய பேர் மதினாவில் குடியேறி இருந்தார்கள். ஆரம்ப கால தியாகங்களை அறியாத மக்களாகவே அவர்கள் இருந்ததால் இந்தப் புரட்சியில் அதிகம் பங்கெடுத்து கொண்டார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மற்ற பகுதிகளை கவனித்த கலீஃபா அவர்கள் தலைநகரத்தை கண்காணிக்க தவறிவிட்டார்கள்.
அதன் விளைவால் யாரும் எதிர்பார்க்காத ஒரு தினத்தில் கலீஃபா அவர்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டது. அப்படியும் சில நபித்தோழர்கள் அங்கிருந்து அந்தக் கிளர்ச்சியாளர்களை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். அலி(ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களும் அங்கே இருந்து அவர்களை தடுக்க முயற்சித்தார்கள்.
ஆனாலும் புரட்சியாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் ஏதும் செய்ய முடியாத தருணத்தில் வீட்டிற்குள் ஏறிக் குதித்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நிலையில் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்