தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 13

கல்பனா சன்னாசி

அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2

அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12

திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு செல்வது ஒன்றும் சரணுக்குப் புதிய விஷயம் இல்லை.

ஆனால் இன்றைக்கு அவன் குரல் பதிவு தேர்வுக்கு செல்வதில் இரண்டு புதிய விஷயங்கள்.

ஒன்று அவனுடைய ஆதர்ஷ இசையமைப்பாளர் ரஹ்மான் சாரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்புக்கான தேர்வு இது.

இரண்டாவது புதிய விஷயம், தீப்தியின் வாழ்த்துக்கள் இல்லாமல் அவன் எந்த குரல் தேர்வுக்கும் இதுவரை சென்றது இல்லை.

அடுத்த நாள் சரணுக்கு குரல் தேர்வென்றால் முதல் நாளே தொடங்கிவிடும் தீப்தியின் வாழ்த்து மழை.

“நாளைய சினிமா பாடகருக்கு என் வாழ்த்துக்கள்” செய்தியோடு சிணுங்கும் சரணின் அலைபேசி. ஒரு புன்னகையோடு அந்த செய்தியைப் படித்து முடிப்பதற்குள் மறுபடியும் சிணுங்கும் அவன் அலைபேசி.

“புகழ்பெற்ற பாடகரின் ஆட்டோகிராபுக்காக ஐயாம் வெயிட்டிங்.”

மற்றுமொரு நம்பிக்கை புன்னகை பூக்கும் சரணிடம்.

“சிறந்த பாடகர் விருது வாங்கும்போது மறக்காமல் எனக்கு டெடிகேட் செய்யவும்.”

தொடர் செய்திகளில் உற்சாகம் பற்றிக்கொள்ள, தீப்தியிடம் உடனே பேச வேண்டும் போலத் தோன்றும் சரணுக்கு.

தீப்தியை அழைத்தால் இரண்டே ரிங்குகளில் அழைப்பு துண்டிக்கப்படும்.

“இன்று நம் மிட் நைட் மசாலா டாக் கேன்ஸல் செய்யப்படுகிறது. சீக்கிரம் தூங்கப் போ. நாளைக்கு ப்ரெஷ்ஷாக பாடணும் நீ. குட் நைட்.”

அக்கறை செய்தி தாலாட்ட, சரண் நிஜமாகவே மிக சந்தோஷமாக தூங்கிவிடுவான்.

அலாரம் எல்லாம் வைக்கத் தேவையில்லை. தீப்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு அவனை எழுப்பிவிட்டுவிடும்.

“ஹலோ சிங்கர்.”

“யெஸ் ரசிகை.?”

“எழுந்தாச்சா?”

“ம்.”

“சரி கிளம்பு.” அலைபேசி வைக்கப்பட்டுவிடும்.

ஒரு மணி நேரம் கழித்து மாறுபடியும் அழைப்பு வரும். தீப்தியிடமிருந்து.

“கிளம்பிட்டியா?”

“ம்.”

“என்ன ஷர்ட் போட்ருக்கே?”

“ப்ளாக் டிஷர்ட். ஜீன்ஸ்.”

“ஃபார்மல்ஸ்ல போடா. உன் ஆடிஷனுக்கும் உன் வாய்ஸுக்கும் மரியாதை கொடு.”

“சரி. சொல்லு. என்ன ஷர்ட் போட்டுக்க?”

“க்ரீம் கலர் பேண்ட் போட்டுக்க. லைட் ப்ளூ கலர் ஷர்ட் மேட்சா இருக்கும்.”

“ஓகே காஸ்ட்யூம் டிசைனர்.”

“சரி, போய் சாப்டு.”

எப்படிதான் தெரியுமோ தீப்திக்கு. சரண் சாப்பிட்டு முடித்து, அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டுப் படியிறங்கி பைக்கில் சாவியை நுழைத்ததும் சரியாக அவளிடமிருந்து மறுபடியும் அலைபேசி அழைப்பு வரும்.

“ஜெமினி ப்ளை ஓவர்கிட்ட ட்ராபிக் அதிகமா இருக்காம். இப்பதான் மிர்ச்சி எஃப் எம்ம்மில் கேட்டேன். நீ டி.டி.கே ரோடு வழியாப் போ. என்ன?”

“ஓகே மை டியர் கூகிள் மேப்.”

“ஒரு வழியாக ஆடிஷன் இருக்குமிடம் வந்ததும், சரணுக்கே கூட கொஞ்சம் சலித்துவிடும். சரியாக வந்து சேர்கிற தீப்தியின் அழைப்பு.

“வண்டி பார்க் பண்ணிட்டியா? இடம் கிடைச்சுதா?”

“ம்.”

“ரிப்போர்ட் பண்ணிட்டியா ப்ரண்ட் டெஸ்க்கில்?”

“இது ஐடி இண்டர்வ்யூ இல்ல தீப்தி. சிங்கிங் செலக்ஷன். ஆனாலும் மேனேஜர்கிட்ட சொல்லிட்டேன்.”

“ஓகே. ஓகே. ஆல் தி வெரி பெஸ்ட். ஜஸ்ட் ராக் இட். ஓகே?”

“ஓகேம்மா.”

“சரண்?”

“சொல்லும்மா.”

“ஐ லவ் யூ.”

“தெரியும் தீப்தி.”

“ஓகே. சூப்பரா படு. ஜஸ்ட் ராக். பை.”

பழைய ஆடிஷன் ஞாபகங்கள் சரணை அலைக்கழித்தன. தீப்தியின் வாழ்த்துக்கள் இல்லாத குரல் தேர்வு அவனுக்கு வெறுமையாக இருந்தது.

அவளின் குறுஞ்செய்திகளோ, அலைபேசி அழைப்புகளோ இல்லாமல் வெற்றிடமாக இருந்த அலைபேசித் திரையை விட அவன் மனதை மிகப் பெரிய வெற்றிடமாக உணர்ந்தான் அவன்.

இது மாதிரி சோகமான மனதோடு தன்னால் சிறப்பாக பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. பேசாமல் ஆடிஷனுக்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் ரஹ்மான் சார் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு!

வருத்தமான இதயத்துடனே குரல் தேர்வை ஒரு வழியாக முடித்துவிட்டு திரும்பினான் சரண்.

“சார் கேட்டுட்டு சொல்வாரு” என்று மட்டும் சொல்லியிருந்தார்கள். குரலைப் பதிவு செய்தவரகள்.

குரல் பதிவு முடிந்ததும் தீப்தியை அழைத்தான் சரண். அலைபேசியை எடுக்கவில்லை அவள். நேரத்தைப் பார்த்தான். தீப்தியின் அலுவலகம் முடிய பல மணி நேரம் இருந்தது.

ஆனால் இந்த மென்பொருள் நிறுவனங்களின் நேர விவகாரம் நிலையானது இல்லை. இது சரணும் அறிந்ததே. அதனால் பைக்கை தீப்தியின் அலுவலகம் நோக்கி விரட்டினான்.

விசாரித்ததில் தீப்தி அலுவலகத்தின் உள்ளே இருப்பது தெரிந்தது. காத்திருந்தான் சரண். தீப்தி வருவதற்காக.

கிட்டத்தட்ட மாலை நேரம், கொஞ்சம் இருள் மங்கிய பிறகே வந்தாள் தீப்தி. ஆனால் தனியாக இல்லை. கூடவே ஒரு ப்ரென்ச் தாடி ஆண்.  அவன் நிறமும் உடல் வாகும் சரணுக்கு ஒரு உடனடி பொறாமையை அளித்தது. ஆனால் அவனின் மொட்டைத் தலை ஆறுதல் அளித்தது.

சரண் தீப்தியை நெருங்கினான்.

அவளின் பார்வை இவன் மீது பதிந்தும் கூட, கொஞ்சம் கூட இவனின் இருப்பை அங்கீகரிக்காமல் சட்டென விலகியது.

“ஹலோ தீப்தி?”

“ஓ சரண்! நீ எங்கே இங்கே?” இயல்பாக கேட்டாள்.

மூன்றாவது நபர் முன் காப்பாற்றப்பட வேண்டிய குறைந்தபட்ச நாகரீகம் அவளுக்கு அந்த செயற்கை இயல்பை வழங்கி இருந்தது.

சரண் – தீப்தி இருவருக்குள்ளும் கனன்று கொண்டிருந்த பரஸ்பர கோபம் வெளியே தலைக்காட்டாமல் தப்பியது அந்த மூன்றாவது நபரால்தான்.

“ஜஸ்ட் வாஸ் வெயிட்டிங் டு சீ யூ.” சரணிடமும் செயற்கை இயல்பு.

“இது செல்வா. என் கொலீக். செல்வா, இது சரண். என் ஃப்ரென்ட்.” என்றாள் தீப்தி.

“லவ்வர்.” என்றான் சரண்.

“ஜஸ்ட் ப்ரெண்ட்.” என்றாள் தீப்தி – ஒரு அழுத்தத்துடன்.

காதுகள் இருந்த செல்வா இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“மே பி ஐ ஷுட் லீவ்” என்று கிளம்ப யத்தனித்தான்.

“என்னை என் ஹாஸ்டலில் ட்ராப் பண்ணிடேன் செல்வா. ப்ளீஸ்?”

தீப்தி செல்வாவை நெருங்கி அவன் தோளைத் தொட்டாள்.

நெருக்கமும் தொடுதலும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது சரணுக்கு.

அவன் எதுவும் சொல்வதற்குள், “பை சரண்”, என்றுவிட்டு, காரின் கதவைத் திறந்து முன்பக்க சீட்டில் தன்னை இருத்திக்கொண்டாள் தீப்தி.

சரண் எதுவும் சொல்வதற்குள் அவன் அருகில் நெருங்குவது போல் தோன்றிட, கார் கண்ணாடிகளை ஏற்றியும் விட்டுக்கொண்டாள் தீப்தி.

செல்வா, கொஞ்சம் சங்கடமாகத்தான் உணர்ந்தான். இருந்தாலும், “சீ யூ அரவுண்ட் ப்ரோ. பை!” என்று சரணிடம் ஒரு முகாந்திரத்துக்காக சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினான்.

காரின் முன் இருக்கையில் இருந்த தீப்தியின் பார்வை ரியர் வ்யூ கண்ணாடி மேல் விழுந்தது. அவள் எதிர்பார்த்தபடியே சரணின் பைக் அவர்களை துரத்திக் கொண்டிருந்தது.

தீப்தியின் விடுதியின் முன்னால் கார் நின்றது. தொடர்ந்து சரணின் பைக்கும்.

தீப்தியை உதிர்த்துவிட்டுக் கார் கிளம்பிவிட, அவளை நெருங்கினான். “தீப்தி, நில்லு.”

“எனக்கு உங்கிட்டப் பேசணும்னு இல்லை.”

“பட் எனக்கு உங்கிட்டப் பேசியே ஆகணும். நில்லு.”

“நீ நில்லுன்னா நிக்க நான் உன் பைக் இல்லை”, தீப்தி விடுதிக் கதவைத் திறந்தாள்.

“யார் சொன்னா நீ என் பைக்குன்னு? நீ என் உயிர்.”

சரண் சொன்னதைக் கேட்ட தீப்தியிடம் சற்றே தயக்கம். ஒரு வினாடிதான். உடனேயே சுதாரித்துக் கொண்டவள், “பழைய டயலாக். புதுசா ஏதாவது சொல்லு” விடுதியின் உள்ளே நுழைந்தாள்.

“பழசோ, புதுசோ அது உண்மை தீப்தி. நீ என் உலகம். நீ என் வாழ்க்கை.” தீப்தியை விரட்டிக் கொண்டே தானும் விடுதிக்குள் நுழைந்து விட்டிருந்தான் சரண்.

முகப்பு வெராண்டாவில் பெண்கள். பெண்கள். மற்றும் பெண்கள். ஷார்ட்ஸிலும். ஸ்லீவ்லெஸ்சிலும் கண்ணைக் கவர்ந்தார்கள்.

ஒரு ஆணின் விடுதி நுழைவு அவர்கள் அச்சமயம் எதிர்பாராதது. தீப்தியை தான் இன்னும் பின் தொடர்வது அநாகரீகமாக முடியலாம் என சரணுக்குத் தோன்றியது.

அதனால் தீப்தியை இன்னும் உள்ளே செல்ல விடாமல், அவளின் கையைப் பற்றி நிறுத்தினான். “ப்ளீஸ். ஸ்டாப் தீப்தி.”

அதற்குள் வார்டன் அம்மா அங்கே வந்துவிட்டிருந்தாள்.

“யார் மேன் நீ? யார் உன்னை உள்ளே விட்டா? வாட்ச்மேன் எங்கே? வாட்ச்மேன்!” வாசலை நோக்கி குரல் கொடுத்தாள்.

“விடு என்னை” சொல்லிக் கொண்டிருந்த தீப்தி, ஆண்களால் அடக்கி ஒடுக்கப்படும் பெண்ணினத்தின் பிரதிநிதியாக அச்சமயத்தில் தோன்றியிருக்க வேண்டும் அந்த வார்டன் அம்மாவுக்கு.

“ஏய் மேன். முதல்ல அவ கையை விடு. லீவ் ஹர் அண்ட் லீவ் மை ஹாஸ்டல்”

“மேடம். தீப்தி எனக்கு ரொம்ப வருஷமாத் தெரியும். பக்கத்து வீடு. காலேஜ் மேட். ப்ரெண்ட் மேடம். ஐ ஜஸ்ட் வாண்ட் டு டாக் டு ஹர்”

சரண் சொன்னதைக் கேட்ட வார்டன் அம்மா, தீப்தியைப் பார்த்தாள். “இந்தப் பையனை உனக்குத் தெரியுமா?”

“தெரியும் மேடம்”, தீப்தி சொன்னதும், அப்பாடா என்று இருந்தது சரணுக்கு. ஆனால் அவள் தொடர்ந்து பேசியது அவனுக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லை.

பலவீனமாக இருந்த சரணின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட தீப்தி, “மேடம் இவன் எனக்கு ரொம்ப தொல்லை தர்றான். இவனை முதல்ல வெளியே அனுப்புங்க.”

“அந்தப் பொண்ணுதான் சொல்றா இல்லை? கிளம்பு நீ.”

“அவ கோபத்துல சொல்றா மேடம். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்டப் பேசிட்டுப் போயிடறேன்.”

“உன்னை தொல்லைங்கிறா? நீ பேச்சு வார்த்தைக்கு கூப்பிடறே? நான் யாரை நம்புறது?”

வார்டன் அம்மா ஒரு குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

சரணும்-தீப்தியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சரண் பார்வையில் சமாதானக் கொடி. தீப்தி பார்வையில் போர் அறிவிப்பு.

சில நொடிப் பார்வைகள் பரிமாற்றத்துக்குப் பிறகு சட்டென சொன்னாள் தீப்தி. “இவன் என்னை ஒரு தடவை கடத்தக் கூட கடத்திட்டான். “

“வ்வாட்??” வார்டன் அதிர,

“தீப்தி, வாட் ஆர் யூ சேயிங்?” சரண் பதற,

“யெஸ் மேடம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கூட இருக்கு.” தீப்தி இன்னும் உறுதியோடு வார்த்தகைகளைக் கொட்டினாள்.

“தீப்தி சொல்றது உண்மையா மேன்?” வார்டன் கேட்டாள்.

சரணுக்கு சலிப்புக் கோபமும் ஒரு சேர தோன்றின.

“உண்மைதான் மேடம். ஆனா…”

சரணைத் தொடர்ந்து பேச விடவிலை அந்த வார்டன் அம்மா. அந்த அம்மா எப்போதோ அழைத்த அந்த வாட்ச்மேன் தாத்தா அப்போது அங்கே வந்து சேர்ந்தார். மிகச் சரியாக.

“வாட்ச்மேன். இந்தாளை வேளியே அனுப்பு.”

“தம்பி. சொல்றாங்கல்ல? கிளம்புங்க தம்பி.”

சரண் ஊதினால் பறந்துவிடுவார் போலத் தெரிந்தார் அந்த வாட்ச் மேன் தாத்தா.

மரியாதை காரணமாக அவரிடம் மல்லுக்கட்டாமல் வெளியே கிளம்பினான் சரண். “தீப்தி. வொய் ஆர் யூ டூயிங் திஸ் டு மீ?” என்று அவளைப் பார்த்தபடியே.

தீப்தியோ ஒரு சினப் பார்வையை அவன் மேல் வீசிக் கொண்டிருந்தாள்.

அந்த விழிகளும், பார்வையும் சரண் வீடு திரும்பி வெகு நேரமாகியும் அவன் நெஞ்சத்தை நூறு தேள்களாக கொட்டிக்கொண்டே இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *