அத்தியாயம் – 22 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

இரண்டாம் கலீஃபா

அபூபக்கர் ரலி அவர்கள் முன்மொழிந்ததின் அடிப்படையில் இரண்டாவது கலீபாவாக உமர் (ரலி) அவர்கள் தேர்வானார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட போது நடந்தவைகள் மிகப்பெரிய சுவாரஸ்யம் நிறைந்தது.

நபி பட்டம் கிடைத்த ஆறாம் ஆண்டு நபிகளாருக்கு இரண்டு பேர் மிகப்பெரிய எதிரியாக இருந்தார்கள். ஒருவர் உமர், இன்னொருவர் அபுஜஹ்ல்.

அபுஜஹ்ல் பிறரை ஏவி விட்டு நபிகளாருக்கு துன்பங்கள் தருபவர், ஆனால் உமர் (ரலி) அவர்களோ உருவிய வாளோடு நபிகளாரின் தலையை கொண்டு வருவேன் என்று திரிந்தவர்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இப்படி வேண்டினார்கள்… “யா அல்லாஹ்! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று.

அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

அபுஜஹ்ல் பத்ரு போரிலே கொல்லப்பட்டார்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுக்குமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார்கள்.

“நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” என்றார்.

அதற்கு நுஅய்ம் “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து தப்பித்து வாழ்ந்து விடுவாயா?” என்று கேட்டார் .

அவரை நோக்கி உமர் “நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவருடைய மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்று உமர் கூறினார்.

அதற்கு நுஅய்ம் “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?”

“சொல்லும்…”

“உனது சகோதரியும் உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்”

என்று கூறியதுதான் தாமதம் கடும் கோபத்தோடு அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் வீட்டை நோக்கி உமர்(ரலி) விரைந்தார்.

அங்கு உமர் அவர்கள் சென்ற போது குர்ஆனில் உள்ள ‘தாஹா’ என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் கடும் கோபத்தோடு ‘நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு அவரது மச்சான் “உமரே! சத்தியம் உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் நீ என்ன செய்வ?” என்று கேட்டார்.

உமர் ரலி அவர்களுக்கு தலைக்கு ஏறியது கோபம் தனது தங்கையின் கணவரின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கினார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். அவரோ கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்தார் அவரது முகத்திலும் ரத்தக் காயம் ஏற்பட்டது.

தங்கையும் அதே ரத்தம் தானே உமர் ரலி அவர்களிடம் எதிர்த்து நின்று மீண்டும் உரக்க…

“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று  கூறினார்.

சகோதரியின் வீரத்தை கண்டு திகைத்து நின்றார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு பரிதாபமும், வெட்கமும் ஏற்பட்டது.

பிறகு சற்று அமைதியாகி “சரி உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள. நான் அதைப் படிக்க வேண்டும்”

கொடுத்தார்கள்…

அதைப் படித்த பிறகு தான் உருவிய வாளை உறைக்குள் வைத்து நபிகளாரை சந்திக்க சென்றார். அதற்குப் பிறகு நபிகளார் மரணிக்கும் வரை, கூடவே இருந்தார்.

உமர் ரலி அவர்கள் இரண்டாவது கலீபாவாக 10 ஆண்டுகள் ஆட்சியிலே இருந்தார்கள். உலகத்தில் பல தலைவர்கள் சிலாகித்துக் கூறக்கூடிய ஆட்சியை கொடுத்தார்கள்.

குறிப்பாக காந்தியடிகள் கூட “கலீஃபா உமரின் ஆட்சிபோல் நமது இந்தியத் திருநாட்டில் அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார். அந்த அளவிற்கு நீதி தவறாமல் ஆட்சி செய்தார்கள்.

அதேபோல வெளியூரிலிருந்து நிறைய பேர் மதினாவில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.  நபிகளார் ‘அதைச் சொன்னார் இதைச் சொன்னார்’ என்று யாராவது கூறினால் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். இல்லை என்றால்… கடுமையான தண்டனை வழங்கி விடுவார்கள்.

ஒருமுறை நபியவர்கள் கூறினார்கள் “உமரே நீங்கள் ஒரு பாதையில் வருவதை கண்டால் சைத்தான் இன்னொரு பாதையில் போய்விடுவான்” என்றார்கள்.

அதாவது உமர் ரலி அவர்களைக் கண்டால் தீயவைகளும், தீயவர்களும் அந்தப் பாதையிலேயே வரமாட்டார்கள். என்று கூறினார்கள் அந்த அளவிற்கு தீயவைகளுக்கு எதிராக நின்றார்கள்.

அப்போதைய காலகட்டத்தில் ஆண்கள் தான் ஒரு குடும்பத்தையே பாதுகாக்க வேண்டும். ஒரு தொழிலுக்குச் செல்பவர் ஒரு ஊரை விட்டு காடு, மலைகளில் அலைந்து வேறு ஊர்களுக்கு சென்று ஒரு மாதங்கள், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என்று தங்கி பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும். அந்த ஆணை நம்பித் தான் பெரியோர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று பெரும் கூட்டமே இருப்பார்கள்.

அப்படிப்பட்ட காலகட்டங்களில் திடீரென்று வரும் போர்களினாலும் காலரா போன்ற நோய்களாலும் ஆண்கள் பெருவாரியாக இறந்து விடுவதுண்டு.

ஒரு ‘ஆணை’ நம்பி இருக்கக்கூடிய ஒரு குடும்பம் தெக்கு திசை தெரியாமல் நிற்கதியாக நின்று கொண்டிருக்கும்.

இப்போதுதான் குர்ஆன் கூறுகிறது “நீங்கள் பெண்களை இரண்டு இரண்டாக மூன்று மூன்றாக திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று.

ஒரு விதவைப் பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்வதின் மூலமாக அந்த குடும்பத்திற்கே நன்மையாக இருக்கும். அந்த காலகட்டங்களில் பெண்கள் வேலைக்குச் சென்று பொருளாதாரம் ஈட்டுவதும் மிக சிரமமான ஒன்று.

அதைத்தான் உமர் அலி அவர்கள் அவர்களின் கடைசி ஆண்டிலே தனது தோழரோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார்கள்.

“இறைவன் எனக்கு இன்னும் ஆயுளை நீட்டி தந்தால் நான் விதவைப் பெண்களுக்கு பொருளாதாரத்திற்காக இன்னொரு ஆணை திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அவர்களுக்கு பொருளாதாரத்தை நான் கொடுத்து விடுவேன்” என்றார்கள்.

இதைச் சொன்ன சில நாட்களிலேயே உமர் ரலி அவர்கள் இறந்து விட்டார்கள்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் ‘கடவுளை நெருங்குவதற்கு பெண்களை நெருங்க கூடாது’ என்பது உலகத்தில் உள்ள மதங்கள் போதிக்கிறது.

‘கடவுளை நெருங்குவதற்கு பெண்கள் ஒரு தீட்டு, என்பது போல கூறப்படுகிறது.

ஆனால் குர்ஆனோ “கடவுளை நெருங்க வேண்டும் என்றால் இரண்டு இரண்டாக மூன்று மூன்றாக திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்கிறது.

மனைவிமார்களில் முதல் மனைவிக்கு முதல் உரிமையும் அடுத்தடுத்த மனைவிகளுக்கு உரிமை இல்லை. என்பது போலவும் உலக நியதி உள்ளது.

ஆனால் இஸ்லாம் ‘அனைத்து மனைவிமார்களையும் சமமாக நடத்த வேண்டும்! அனைத்து மனைவிமார்களின் பிள்ளைகளும் அந்த ஆணுடைய வாரிசு ஆகும். அனைத்து மனைவிமார்களிடமும் சரிசமமாக நடக்கக்கூடிய ஒருவன் தான் கடவுளை நெருங்க முடியும்! என்கிறது.

“திருமணம் முடிக்காதவன் என்னைச் சேர்ந்தவனே இல்லை” என்று நபிகள் நாயகமும் கூறுகிறார்கள்.

இல்லறத்தில் ஈடுபட்டு பிறர் நலனில் அக்கறை கொண்டு நீதத்துடன் நடப்பவரே மிகச்சிறந்த ஆன்மீகவாதி.

இப்படி நீதியையும் நியாயத்தையும் கொள்கையாகக் கொண்டு ஆட்சி நடத்திய உமர் ரலி அவர்களின் மரணம் மிகக் கொடூரமானது.

Leave a Reply