அத்தியாயம் – 26 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

நான்காவது கஃலிபாவும் இறந்து விட்டதால் அந்த இடத்தில் நபிகளார் உடைய பேரன் அலி ரலி அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களை அடுத்த கலீஃபாவாக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். நபிகளாருக்கு மிகவும் பிடித்த பேரன் மிகவும் மென்மையான குணம் கொண்டவர் மிகச்சிறந்த பண்பாளராக அவர்கள் இருந்தார்கள்.

மிக பலவீனமாக இருந்த அந்த ஆட்சியை அவர்கள் பொறுப்பேற்ற அடுத்த ஆறு மாதத்தில் முஆவியா ரலி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். யாரும் எதிர்பார்க்காமல் அவர் செய்த இந்தக் காரியத்தை பலரும் விமர்சித்த போது கூறினார்கள் “இஸ்லாமிய உலகம் இரண்டாக இருக்கக் கூடாது ஒரே கொடையின் கீழ் தான் இருக்க வேண்டும் ஆகவே பலமாக இருக்கக்கூடிய முஆவியாவிடம் நான் ஒப்படைத்தது சரியானது” என்று கூறி தனது நியாயத்தை மக்களிடத்திலே தெரிவித்தார்கள்.

ஆமாம் உமர் அலி அவர்களால் ஆளுநராக ஷாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் தான் முஆவியா ரலி அவர்கள். 20 ஆண்டுகள் ஆளுநராகவும் அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் கலீஃபா இருந்தார்கள்.

அலி ரலி அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டதும். உஸ்மான் ரலி கொலைக்கு நியாயம் கேட்டு அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் முஆவியா அவர்களின் தலைமையில் ஒன்று சகூடினார்கள் மக்கள் எல்லாம் அவர்களுக்கு கீழாக ஒன்று கூடும் அளவிற்கு மிக சிறப்பான ஆளுநராக ஷாமில் இருந்தார். இந்த பிரிவினைகளை ஒன்று சேர்க்க அவர்தான் சரியானவர் என்று தெரிந்ததால் தான் ஹசன் ரலி அவர்கள் ஒட்டுமொத்த பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார்கள்.

இப்போது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து பிரிந்து தனித்தனியாக ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அடக்கி ஒரே தேசமாக பழைய நிலைக்கு முஆவியா ரலி அவர்கள் கொண்டு வந்தார்கள். தற்போது தலைநகரம் மதினாவில் இருந்து ஷாம் (சிரியா) தேசத்துக்கு மாறியது.

முஆவியா ரலி அவர்கள், உமையா கூட்டத்தைச் சேர்ந்தவர். தலைமுறைத் தலைமுறையாக இவர்களுடைய குடும்பம் ஆட்சி பொறுப்பை நடத்தியவர்கள். குரைஷிகளின் தலைவர் அபு சூப்யான், ஹிந்தா அவர்களின் மகன்.

மேலும் நபிகளார் கூட இருந்தவர், முதலாவது கஃலீபா அபூபக்கர் ரலி அவர்கள் காலத்தில் இருந்து திறம்பட சேர்ந்து செயல்பட்டவர். இத்தனைத் தகுதிகளையும் பெற்றிருந்ததார். இவரிலிருந்து ஆரம்பித்து கிட்டத்தட்ட 91 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்களை உமையாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

உமையாக்கள், அப்பாஸியாக்கள், என்பதெல்லாம் பிறகு வரலாற்று ஆசிரியர்களால் சூட்டப்பட்ட பெயர்கள்.

இஸ்லாமிய படையை நேர்த்தியான ராணுவமாக வடிவமைத்தார்கள். மேலும் முதன்முறையாக கப்பல் படையை உருவாக்கினார்கள்.

இதுவரை இருந்த கலிபாக்கள் நபிகளாரின் தோழர்களாலோ மக்களாலோ தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்குப் பிறகு வந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை நபித்தோழர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

உமையா கலீஃபாக்கள்

முஆவியா ரலி அவர்கள் இறந்ததும் அவர்களின் மகன் யஜீது அவர்கள் அரியணை ஏறினார்.

இவர் மிகக் குறுகிய காலம் தான் ஆட்சியில் இருந்தார். மூன்று ஆண்டு ஆட்சி தான் நடத்தினார். ஆனால் அதற்குள் மிகப்பெரிய மூன்று சம்பவங்கள் நிகழ்ந்தன. இவருடைய தலைமையை அப்துல்லா இப்னு ஜுபைர் ரலி அவர்களும் ஹுசைன் ரலி அவர்களும் மதினாவாசிகளும் ஏற்கவில்லை.

கலிஃபாவை ஏற்கவில்லை என்றால் அவர்கள் புரட்சி செய்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே முதலில் மதினாவாசிகளை அடிபணிய வைக்க அங்கு மிகப்பெரிய ஒரு யுத்தத்தை நடத்தினார்கள் மதினா வாசிகளுக்கு எதிராக நடந்த அந்த யுத்தத்தில் எஜிதுடைய படை எல்லை மீறி நடந்து கொண்டது.

இரண்டாவது சம்பவமாக கர்பலா யுத்தம் நிகழ்ந்தது. இது நபி அவர்களின் இரண்டாவது பேரன் ஹுசைன் ரலி அவர்களுக்கு எதிராக நிகழ்ந்தது.

“தனது அண்ணன் ஹசன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா அவர்களிடம் கொடுத்தது தவறு” என்ற எண்ணத்தில் இருந்தவர்களை சிலர் தூண்டி விட்டனர். மதீனாவில் வசித்து வந்தவர்கள் பிறகு மக்கா சென்றார்கள். பிறகு கூஃபாவாசிகள் அங்கே அழைத்தார்கள்.

“உங்களது தந்தை அலி ரலி அவர்கள் இங்கிருந்து தான் ஆட்சி நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்கு பின்னால் நின்றோம் ஆகவே நீங்களும் இங்கே வாருங்கள் உங்களுக்கு பின்னால் நாங்கள் நிற்கிறோம்” என்றார்கள்.

அதை நம்பிய ஹுசைன் ரலி அவர்கள் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் சென்றார்கள். இதற்கு மக்காவிலே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமான மார்க்க அறிஞர்கள் எல்லாம் “போக வேண்டாம்” என்று தடுத்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் “அது உங்கள் தந்தையை கொலை செய்த ஊர் ஆகவே அங்கே நீங்கள் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். ஆனால் அவர்களோ கூபாவாசிகளின் பேச்சை நம்பி கிளம்பி விட்டார்கள்.

அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் குராசான் அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து எகிப்து வரை சென்றிருந்தது. ஒரு செய்தி கலீஃபாவிற்கு எட்டுவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும்.

ஆகவே நிறைய அதிகாரத்தை கொடுத்து ஆங்காங்கு ஆளுநர்களை நியமித்திருந்தார்கள். ஆளுநர்களே நிறைய முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்த நிலையில் தான் இவர்கள் கூபாவை நோக்கி சென்றார்கள்.

இவர்கள் வருவதை ஏற்கனவே கூபாவின் ஆளுநர் தெரிந்து கொண்டார். இந்நிலையில் ஹுசைன் (ரலி) அவர்களை அழைத்த கூஃபாவாசிகளும் காலை வாரி விட்டனர்.

“வாருங்கள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொன்னவர்கள் ஒருவர் கூட வரவில்லை. இவர்கள் சென்ற பாதையிலேயே ஒரு சிறு படை பிரிவு அவர்களை தடுத்து நிறுத்தியது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அரசாங்க அதிகாரிகளை பொறுத்த வரை, நபிகளாருடைய பேரன் என்றாலும் ‘அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வந்துள்ளார்’ அவ்வளவே.

இறுதியாக “நான் போக அனுமதியுங்கள்” என்று கேட்டார்கள்.

ஆனால் தளபதியோ நீங்கள் எங்கள் கூஃபாவின் ஆளுநர் இப்னு ஸியாதிடம் சரணடைய வேண்டும் என்றார்கள். பிறகு அங்கிருந்து ஹுசைன் ரலி அவர்கள் கர்பலா எனும் இடத்திற்கு சென்றார்கள். அங்கே கூடாரம் அமைத்தார்கள். கூடாரத்தைச் சுற்றி படைகள் நிறுத்தப்பட்டன மேலும் கூடுதலாக படைகள் அங்கே வந்து சேர்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *