அத்தியாயம் – 16
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
தீப்தியைப் பற்றித் தெரிய வேண்டுமானால் ரேணுவை அழைக்க வேண்டும். அழைத்தான் சரண்.
“சொல்லுடா என் லவ்வர் பாய். என்ன இந்த ராத்திரி நேரத்துல எனக்கு போன்?”
“காலையிலேருந்து ட்ரை பண்றேன் உனக்கு? போனை என்னப் பண்ணே?”
“கூல் கூல். ரெண்டு நாளா போன் வேலை செய்யலை. இப்பதான் சர்வீஸ் செண்டரிலிருந்து போனை வாங்கிட்டு வர்றேன். சொல்லு. இப்ப என்ன திடீர்னு என் ஞாபகம்?”
“ரேணு ஞாபகமில்லை. தீப்தி ஞாபகம்.”
“ஓ.. தீப்தி. எனக்குப் போட்டி அந்த மொச்சக் கொட்டை கண் அழகிதான். இப்ப என்னவாம் அவளுக்கு?”
“நீதான் சொல்லணும்.”
“என்ன சொல்லணும்? அவளை விட நாந்தான் உனக்குப் பொருத்தம்ணா?”
“ப்ளீஸ் ரேணு. நான் ஏற்கனவே நொந்து நூடுல்ஸா இருக்கேன்..”
“அப்ப என் வீட்டுக்கு வா. உன்னை அப்டியே சாப்ட்டுடறேன்.”
“ரேண்..!”
“ஓகெ. ஓகே. தீப்தியோட தற்சமய நிலவரம் தெரியணும். அதானே? விசாரிச்சிட்டு உன்னை நானே கூப்பிடுறேன். இப்ப போனை வை.”
வைத்த சரண் நொடிக்கு நூறு தடவை போனை பார்த்துக் கொண்டிருந்தான். அது அடிக்கிற வழியைக் காணோம்.
பொறுமை இழந்து தானே ரேணுவை அழைத்தான்.
அதுவோ, “நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றது.
பொறுமை இல்லாமல் மீண்டும் மீண்டும் அழைத்தான் ரேணுவை. இரண்டு மூன்று முயற்சிக்குப் பின் எடுத்தாள்.
“யு ஆர் லேட் மை லவ்வர் பாய்” என்றது ரேணுவின் சற்றே தணிந்த சோகக் குரல்.
“ஏன்? என்னாச்சு? தீப்திக்கு ஒண்ணுமில்லையே?” இஸ் ஷீ ஆல்ரைட்?”
“தீப்தி ஆல்ரெடி ஆன் தி வே டு அமெரிக்கா.”
“வ்வாட்??”
“கம்பெனி ப்ராஜக்ட் விஷயமா ப்ளோரிடா போறா. கூட யார் தெரியுமா?”
“யாரு?”
“செல்வா.”
சட்டென ஒரு நிம்மதி அழிந்த நிசப்தம் கவிந்தது சரண் மேல்.
“சரண், ஆர் யூ தேர்? ஹலோ??”
நினைவுக்கு மீண்டவன், “என்னிக்கு கிளம்புறா?”
“இன்னிக்கு”
மறுபடியும் சரணிடம் ஒரு மௌனம். அதிர்ச்சி தந்த மௌனம்.
“எத்தனை மணி ஃப்ளைட்?”
“ப்ரிட்டிஷ் ஏர்வேஸ். மிட் நைட் ஃப்ளைட். 12:45 டிப்பார்ச்சர்.”
தனக்கு ஒரு தாங்க்ஸும் சொல்லாமல் ஒரு பை கூட சொல்லப்படாமல் சரணின் தொலைபேசி அணைக்கப்பட்டது ரேணுவுக்கு ஒன்றும் ஆச்சரியம் தரவில்லை.
அவளுக்கு ஆச்சரியம் தருகிற விஷயம் எதுவென்றால், சரண் மாதிரி “நல்ல பையன்கள்” ஏன் தீப்தி மாதிரி சண்டித்தனம் செய்கிற பெண்ணையே காதலிக்கிறார்கள் என்பதுதான். அதுவும் உண்மையாக. உயிருக்கு உயிராக.
சரண் பைக்கின் ஸ்பீடா மீட்டரில் முள் தன் கண்ணாடிக் கவசத்தை தாண்டி வெளியே எகிறிக் குதித்து விடுவது போலத் துடித்தது.
நகரத்து போக்குவரத்து தந்த தடைகளை மீறி பறந்து கொண்டிருந்தது அவன் பைக்.
“விமான நிலையம்” என்று அறிவித்த சாலையைத் தொட்டு, எப்படியும் தீப்தியை சந்தித்து விட வேண்டும் என்று நேரத்தை துரத்திக் கொண்டிருந்தார்கள் அவனும் அவன் பைக்கும்.
பார்க்கிங்கில் பைக்கை கடாசிவிட்டு, இண்டர் நேஷனல் டிப்பார்ச்சர்” என்று அறிவித்துக் கொண்டிருந்த பகுதிக்கு ஓடினான்.
செக் இன் பகுதிக்கு நுழைந்துவிட்டாள் என்றால், தீப்தியை பிறகு பிடிக்க முடியாது.
சரண் தன் சுற்றுப்புறத்தை அலசினான்.
எங்கெங்கும் பிரியாவிடை அழுகைகள். பிரிவுக்குப் பிறகு கைகூடிய சந்திப்பின் அணைப்புகள்.
தீப்தி குறித்த பரபரப்பு இல்லையெனில், சரணை ஒரு தத்துவவாதியாக மாற்றியிருக்கும் அந்த சூழல்.
பயணிகள் அல்லாத பிறர் அனுமதிக்கப்பட்ட அந்தப் பகுதியின் எந்த அங்குலமும் சரணின் பதற்ற விழிகளிடமிருந்து தப்பவில்லை.
கண்ணாடிக் கதவுகளுக்கு அந்தப் பக்கம் கிடந்தது பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதி.
கண்ணாடியைத் தாண்டி கண்களை அனுப்பினான் சரண்.
தீப்திதான்!
ஒரு ஆளை மடக்கி அதனுள் திணித்து விடக் கூடிய அளவில் இருந்தன அந்த ட்ராலியில் இருந்த சூட்கேஸ்கள். அருகில் தீப்தி.
சரணுக்கும் தீப்திக்கும் நடுவில் புரிதல் தவறி அதனால் நிலவிய பனிப்போருக்குத் துணையாக அந்தக் கண்ணாடித் தடுப்புகளும் அவர்களைப் பிரித்தே வைத்தது.
செய்வதறியாமல் திணறினான் சரண்.
தீப்தி சிறு புன்னகையுடன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
யாரது?

செல்வா!
எரிகிற கொள்ளியில் எண்ணெய்! வெந்த புண்ணில் வேல்!
கண்ணாடி உடைத்து அதன் துண்டுகளை செல்வா நெஞ்சில் செருகினான் சரண் – தன் மனதுக்குள்!
தீப்தி இந்தப் பக்கம் திரும்புவது போல் தெரிந்தது சரணுக்கு.
ஆமாம். திரும்பினாள்தான்.
அவள் பார்வை கண்ணாடி தாண்டி, இவன் மேல் விழுந்ததோ?
அப்படித்தான் தோன்றியது சரணுக்கு.
தீப்தியை நோக்கி கைகளை ஆட்டினான்.
அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
ஆனால் அவள் முகம் இவன் பக்கம் தவிர்த்தது. செல்வாவின் பக்கம் திரும்பியது.
குளிர் கண்ணாடி அணிந்திருந்தான் அவன்.
சிரித்தபடியே செல்வாவிடம் ஏதோ பேசிய தீப்தி, இயல்பாக அவனின் கூலிங்கிளாஸை கழற்றித் தன் கண்களில் அணிந்துகொண்டாள்.
மறுபடியும் முகம் சரண் பக்கம் திரும்பியது.
ஆனால் தன்னைப் பார்க்கிறாளா தீப்தி? இல்லையா என அறிந்துகொள்ள இயலவில்லை. அதன் புண்ணியம் செல்வாவின் கூலிங்கிளாஸ்!
தன் பாட்டுக்கு செல்வாவின் கைகளைப் பற்றுவதும் தோளில் சாய்ந்து சிரிப்பதுமாக இருந்தாள் தீப்தி. அடிக்கடி சரண் பக்கமும் திரும்பினாள்.
விமான நிலையத்தின் கண்ணாடி தாண்டி செல்வாவின் கூலிங்கிளாஸ் தாண்டி கூடவே, அவளின் கோபத்தையும் தாண்டி தீப்தியிடம் தொடர்பு கொள்வது எப்படி என சரணுக்குப் புரியவில்லை.
கைகளை இதயம் போல் அமைத்து விரல்களால் ஒரு ஆட்டீன் வடிவத்தை சைகை செய்தான்.
அவனுக்கும் தீப்திக்கும் மட்டுமே பரிச்சயமான சைகை அது. அவர்கள் இருவரின் பிரத்யேக “ஐ லவ் யூ” சைகை.
ஒரு நிமிடம், திருப்பிக்கொள்ளாமல், சரண் பக்கம் நிலைத்ததோ தீப்தியின் பார்வை?
அது சர்வ நிச்சயமாக தீப்திக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.
கண்டிப்பாக சரணுகுத் தெரிய வாய்ப்புமில்லை. வழியுமில்லை.
அவன் தவிப்புகளை கண்டுகொள்ளாமல் தீப்தியும் செல்வாவும் எல் ஈ டி அறிவிப்பு பலகையைப் பார்த்தனர்.
அவர்களின் விமானத்துக்கான அறிவிப்பாக இருக்க வேண்டும். சட்டென்று தயாராகி தத்தம் கைச்சுமைகளுடன் விமான நிலையத்தின் உட்பக்கம் நுழைந்தனர்.
மறுபடியும் தீப்தி – செல்வாவின் முதுகினை நோக்கிய சரணின் விழிகளில் விழுந்த அந்தக் காட்சி, செல்வா – தீப்தி ஜோடியாக அவனை விட்டு விலகிக் கொண்டிருந்த காட்சி, அவன் விழிகளை விட்டு மறையவே இல்லை.
வேறெதுவும் அவன் விழிகளுக்குத் தெரியவே இல்லை.
கடைசி முயற்சியாக தடதடவென்று கதவுக்கருகில் இருந்த காவலாளியிடம் சென்றான்.
இவன் பேசிய ஆங்கிலம், தமிழ் அந்த வட இந்தியக் காவலாளிக்குப் புரியவே இல்லை.
ஏதேதேதோ பேசிய சரண், காவலாளிக்கு எதையும் புரியவைக்க முடியாமல் கதவைத் தாண்டி உள்ளே நுழைய முற்பட்டான்.
திமிறிக்கொண்டு பாதுகாப்புக்குட்பட்ட பிரதேயேகப் பகுதியில் நுழைய முயன்றவனை காவலாளி என்ன முயற்சி செய்தும் தடுக்க முடியவில்லை.
உள்ளே நுழைந்த சரண் பேச்சு எடுபடவில்லை.
திமிறத் திமிற அவன் வலுக்கட்டாயமாக விமான நிலையத்துக்கு வெளியே விரட்டப்பட்டான். துரத்தப்பட்டான்.
பார்க்கிங்கில் பைக் அனாதையாக கிடந்தது.
நகரம் இருட்டில் உறங்கிக் கொண்டிருந்தது.
சென்ற போது இருந்த வேகத்தை இழந்திருந்தது பைக்.
ஓட்டுகிறவனின் சோகம் புரிந்த மாதிரி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது நெரிசலற்ற சாலையில்.
சரணின் முன்பாகவோ ஜோடியாக மறைந்த தீப்தி-செல்வா முகங்கள்!
அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்த ஒரு மஞ்சள் விளக்கை சற்றும் கவனியாமல் கடந்தது சரண் பைக்.
அதை மோதியது அதி விரைவாக எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி.
ரத்த வெள்ளத்தில் கிடந்தான் சரண்.
இருள் சூழந்த சாலையில் கேட்பாரற்று!
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.