அத்தியாயம் – 19
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
சரண் இளைஞன். ஒல்லியுமில்லை. நிச்சயமாக குண்டு கிடையாது, வாகான தேகம். வாரத்துக்கு நாலு நாள் ஜிம் பயிற்சியை தவற விடமாட்டான்.
வீட்டின் முன்புற புல் வெளியில் அப்பாவுடனும் கொஞ்ச நேரம் சின்னச் சின்னப் பயிற்சிகள் – அப்பாவுக்காக!
ஆனால் அப்பாவை தினமும் பயிற்சி செய்ய வைப்பது பெரும் பிரயத்தனம்.
“ஆச்சு அறுபது வயசு. அதுக்கு மேல எனக்கெதுகுப்பா எக்ஸர்ஸைஸ்?”
“வயசு ஞாபகமிருக்கு. சரிதான். சுகர் லெவல் ஞாபகம் இருக்கா?”
“இருக்குப்பா. அதான் இன்ஸுலின் போட்டுக்கிறேனே?”
“டாக்டர் என்ன சொன்னார்?”
“இஞ்செக்ஷன் மட்டும் போதாது. டயட்டும் எக்ஸர்சைஸும் முக்கியம்னு சொன்னாரில்லை?”
“அதுக்குன்னு இப்டி காலங்காத்தாலேயேவா? சரண்?”
“காலை வெயில் உடம்புக்கு நல்லது. விட்டமின் டி கிடைக்கும். வாங்க,”
செய்தித்தாளும், காபி கப்புமாக தளர்வாக இருக்கும் அப்பாவை பிடித்து வாசல் புல் வெளிக்கு இழுத்து வருவான் சரண்.
வேண்டா வெறுப்பாக வந்து கடனேன்னு கையைக் காலை அசைப்பார்.
“இன்னும் நல்லா குனிங்கப்பா. தொப்பை குறையும்.” சரண் சொன்னால்,
“இத்தனை வயசுக்கு மேல தொப்பை குறைஞ்சி என்னாகப் போகுது சரண்?” அப்பா சலித்துக்கொள்வார்.
“என்னோட அப்பா நீங்க. பிட்டா இருக்க வேணாமா?”
அது மாதிரியான ஒரு காலைப் பொழுதில், அப்பாவும் மகனுமாக கையைக் காலை நீட்டி மடக்கிக் கொண்டிருந்தபோது, மதில் சுவருக்கு அடுத்தப் பக்கம் அரவம்.
காலியாக இருந்த பக்கத்து வீட்டு வாசலில் ஒரு டிரக்.
அனுமான் ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் மூவர்ஸ் என்று தன் பேரை அறிவித்துக் கொண்டிருந்தது.
“புதுசா குடி வர்றாங்க போல”, என்றார் அப்பா குனிந்து நிமிர்ந்தபடியே.
ஆட்கள் சாமான்கள் இறக்குவதை “அதை எடு. இதை எடு” என்று விரட்டிக் கொண்டிருந்தார் ஒருவர், அவரின் அந்த மிடுக்கான அதிகாரத் தோரணை வேலையாட்களின் மேல் அவருக்கு இல்லாது போன பரிவை பறைசாற்றியது.
அதனாலேயே என்னவோ சரணுக்கு அவர் மேல் ஒரு உடனடி பிரியமின்மை வந்து தொலைத்தது.
“அந்தப் பெரிய கண்ணாடி பத்திரம். பெல்ஜியம் கிளாஸ். இம்போர்ட்டட்”, அவரின் அதட்டல் கொஞ்சம் அதிகப்படிதான்.
அவர் வீட்டுக்குள் நுழைய, அவரின் பின்னாலேயே அந்தப் பெண்மணி வந்து கொண்டிருந்தாள். தாட்டியான உருவம்.
“அப்பா உங்க தொப்பையை விடப் பெரிய தொப்பை” சரண் சிரிக்காமல் சொன்னான்.
“யாருக்கு?” கேட்டபடியே பார்வையைத் திருப்பிய அப்பா அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் பட்டென்று சிரித்துவிட்டார்,
சிரிப்போசையில் இவர்கள் பக்கம் திரும்பிய அந்தப் பெண்மணி தன் புடவையை சரி செய்து கொண்டார்.
“சின்னவங்க பெரியவங்கன்னு இல்லை. பொம்பளைன்னா வெறிச்சு வெறிச்சு பாக்குறாங்க.”
அந்தம்மாள் சற்று உரக்கவே சொன்னாள்.
இவர்களுக்கு கேட்க வேண்டும் என்றே.
அந்த அம்மணியின் உருவம் வீட்டுக்குள் புகுந்ததும், “தேவையாடா நமக்கு இது? எல்லாம் உன் ஜோக்கால்.”
வேலையாட்கள் சாமான்கள் இறக்குவதை வேடிக்கை பார்த்தபடியே அப்பாவும் மகனும் தங்கள் பயிற்சியைத் தொடர்ந்தனர்.
அப்போதுதான் சரணின் பார்வை வளையத்துக்குள் தீப்தி நிழைந்தாள்.
அவளின் பெயர் தீப்தி என்பது அவனுக்கு அப்போது தெரியாது.
ரோஜா வண்ண சுடிதார். வெள்ளைத் துப்பட்டா.
தோள் வரை இருந்த அடர்த்தியான கூந்தல் அலை பாய்ந்தது.
உடையில் அவள் அழகா? அவளால் அந்த உடைக்கு அழகா? சரண் மனதுக்குள் பட்டி மன்றம்.

“அண்ணா… பாத்து” தலையில் ஒரு பெரியப் பெட்டியை வைத்துக்கொண்டு ஒருவர் தடுமாற, பரிவாக ஒலித்தது அந்த இளம் பெண்ணின் குரல்.
அந்தப் பரிவிலேயே அவளின் மேல் சட்டென ஒரு பிரியம் பிறந்தது சரணுக்குள்.
“பெல்ஜியம் கண்ணாடி பத்திரம். பாத்து. பாத்து இறக்க சொல்லு தீப்தி”, உள்ளேயிருந்து குண்டம்மாவின் குரல்”
“ஓகே. ஓகே நான் பாத்துக்கிறேன்.”
“அங்கே மட்டும் பார்க்கிறாயே. கொஞ்சம் இங்கே என்னையும் பாரேன்” சரணின் மனக்குரலின் விண்ணப்பம் அவளை எட்டியதாகத் தெரியவில்லை.
சாமான்களை இறக்குகிறவர்களைப் பார்த்துக் கொண்டும், அவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருந்தாள்.
திடீரென ஒரு டமால் சத்தம்.
தரையெங்கும் சிதறிக் கிடந்தன கண்ணாடி சில்லுகள்.
அந்தப் பெல்ஜியம் கண்ணாடியாக இருக்க வேண்டும்.
உடைத்த பணியாளரின் கண்களில் பயம்,
கண்ணாடி உடைந்த ஓசை வீட்டின் உள்ளேயிருந்து அதட்டல் ஆசாமியையும் தொப்பை பெண்மணியையும் வாசலுக்கு இழுத்து வந்தது.
உடைத்த நபர், “ஸாரி சார். எடுத்துக்கிட்டு வரும்போது பக்கத்து வீட்டு மரக்கிளை இடிச்சிடுச்சி”
அவ்வளவுதான். அங்கே ஒரு பெரும் யுததமே நிகழ்ந்தேறிவிட்டது.
உடைத்தவனை விட்டுவிட்டார் அதட்டல் ஆசாமி. இவர்களிடம் வந்தார். “என்ன சார் உங்க மரக்கிளை எங்க வீட்டு வழியில இடைஞ்சல் பண்ணுது? முதல்ல அதை வெட்டுங்க சார்.”
அந்தக் கோபக் குரல் ஒன்றும் சரண் அப்பாவை பாதித்ததாக தெரியவில்லை.
முகத்தில் புன்னகையுடன் இரு வீட்டிற்கும் இடையே கிடந்த அந்த மதில் சுவரை அணுகினார்.
“எதுக்கு சார் வந்ததும் வராததுமா மரத்தை வெட்டு, கிளையை வெட்டுன்னு? நல்லதாப் பேசுவோமே? பை தி வே, ஐ ஆம் யுவர் அடுத்த வீட்டு நெய்பர். கிளாட் டு மீட் யூ.”
“போய்யா நீயும் உன் கிளாடும் ப்ளேடும். உன் வீட்டு மரத்தால என் இம்பபோர்ட்டட் பெல்ஜியம் கண்ணாடி போச்சு. அதோட விலை தெரியுமா உனக்கு? லட்சம்யா லட்சம். லட்சத்துக்கு எத்தனை சைபர்னு தெரியுமா? காசை நீ கொடுப்பியா? உங்கப்பன் கொடுப்பானா?”
அதிர்ந்து போய் நின்றுவிட்டர் சரணின் அப்பா. இப்படியொரு வார்த்தை தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அது பழகிய விஷயமும் இல்லை. என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினார்.
சரணுக்கு அந்த அதட்டல் ஆசாமியின் சட்டையைப் பிடித்து பளார் பளார் என நாலு சாத்து சாத்த வேண்டும் போல இருந்தது,
ஆனால் தீப்தியின் முன்னால் முதல் முதலாக ஒரு சண்டைக்காரனாக அறிமுகமாக பிரியப்படவில்லை சரண்.
எனவே “உங்களுக்கு இடைஞ்சல்னா வெட்டிடலாம் சார். என்ன இப்ப?” என்றான் அதட்டல் ஆசாமியிடம், ஒரு அமைதிப்பிரியனாக
“ஒரு கிளைதானேப்பா? வெட்டினா மரத்துக்கு ஒண்ணும் ஆகாதுப்பா” என்று அப்பாவையும் சாந்தப்படுத்தினான்.
ஆனால் அதட்டல் ஆசாமியோ, “அப்பங்காரன் சண்டைக்கு வந்தா மவன் நீ என்ன சமாதனக் கொடி பிடிக்கிறியோ?” என்றார் காட்டம் குறையாமல்.
அப்பாவை, “அப்பங்காரன்” என்றது சரணை சீண்டியது.
“இப்டி மரியாதை இல்லாம பேசுறது நல்லாயில்லை சார்” பதில் சொல்ல வேண்டியது சரணுக்கு கட்டாயமாகிப் போனது.
“நல்லாதான் இருக்காது. எங்ககிட்ட வச்சிக்கிட்டா அப்பன் மவன் ரெண்டு பேருக்கும் எதுவுமே நல்லாயிருக்காது. தெர்தா?”
அதட்டல் ஆசாமியின் தொடர்ச்சியான சீண்டலில் சினமானான் சரண்.
திரும்பத் திரும்ப, “அப்பன் மவன்“ என்கிற ரீதியிலேயே அந்த ஆசாமி பேசியப் பேச்சு சரணுக்குள் ஆத்திரத்தைக் கிளம்பியது.
“எங்களுக்குப் பக்கத்து வீட்டுக்கு வதிருக்கீங்க. பத்திரமா இருந்துக்குங்க” என்றான் சற்றே மிரட்டுகிற தொனியில்.
“என்னையே மிரட்டுறியா?”
“நல்லா நடந்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். நல்லா நடந்துக்கலைன்னா நல்லா இருக்காது.”
அதட்டல் ஆசாமியின் வார்த்தைகளை தானும் பிரயோகித்தான் சரண். அவரின் அடாவடித்தனத்துக்கு அவர் பாஷையிலேயே பதிலை சொன்னான்.
“என்னடா நீ? ரொம்ப பேசுறே? நான் யார் தெரியுமா உனக்கு?”
“தெரியாது. தெரிஞ்சுக்கவும் தேவையில்லை எனக்கு.”
“மரத்தை வெட்டுடான்னா சொன்னதை கேக்க மாட்டியா நீ?”
“வெட்ட முடியாது போய்யா.” முடிவாக சொல்லிவிட்டு,
“நீங்க வாங்கப்பா” அப்பாவோடு வீட்டுக்குள் திரும்பிவிட்டான் சரண்.
“என்னடா சரண், இந்தாள் இப்டி இருக்கான்? நமக்கு தொல்லைதான் போல” அப்பா முணுமுணுத்தபடி சரணைத் தொடர்ந்தார்.
அதட்டல் ஆசாமியின் கோபக் குரலில் ஏதேதோ ஏச்சும் பேச்சும் அவர்களைப் பின் தொடர்ந்தது.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.