அத்தியாயம் – 18
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
“ஹாய்” – சரணமிடமிருந்து.
“யாருப்பா இது?” – செல்வாவிடமிருந்து.
அவர்களின் அலைபேசி செய்தி பரிமாற்றம் இவ்வாறாகத் தொடங்கியது.
“நான் சரண், தீப்தியின் நண்பன்.”
இந்தச் செய்தியை சரண், செல்வாவிற்கு அனுப்பிய பிறகு செல்வாவிடமிருந்து பதிலையே காணோம்.
வினாடிகள் நிமிடமானது. நிமிடங்கள் பல மணி நேரம் ஆனது. நாட்களே முழுசாக இரண்டு முடிந்து விட்டது.
செல்வாவிடமிருந்து பதில் இல்லை.
“தீப்தியின் நண்பி” என்று சொல்லி இருந்தால் உடனே பதில் அனுப்பியிருப்பான். டாமிட்!
சரணால் புலம்ப மட்டுமே முடிந்தது. ஆனால் இரண்டரை நாட்களுக்குப் பிறகு ஒரு நட்ட நடு ராத்திரியில் செல்வாவிடமிருந்து பதில் வந்தது.
“என்ன விஷயம் சரண்?”
பாதி தூக்கத்தில் இருந்த சரண் செய்தியைப் படித்ததும் படக்கென்று எழுந்து உட்கார்ந்து விட்டான்.
நினைப்பது எல்லாவற்றையும் செல்வாவிடம் கொட்டி, தீப்தியுடன் பேச வேண்டும் என்று சொன்னால் அது பலிக்காது என்றே தோன்றியது சரணுக்கு,
மெல்ல மெதுவாக நின்று நிதானமாக காயை நகர்த்தலாம். அதி ஜாக்கிரதையாக செய்தியை கோர்த்தான்.
“முக்கியமான விஷயம் எதுவுமில்லை. தீப்திக்கு ஒரு ஹலோ சொல்லலாம் என நினைத்தேன். தீப்தியை வழியனுப்ப வர முடியவில்லை.”
“தீப்தி அலைபேசிக்கே உங்கள் ஹலோவை அனுப்பலாமே?”
“மொபைல் உடைந்துவிட்டது. அவள் எண்ணை இழந்துவிட்டேன்.”
“சரி. உங்கள் ஹலோவை தீப்தியிடம் சொல்கிறேன். பை.”
அடப்பாவி.
அதற்குள் “பை” சொல்லிவிட்டான்?
சரி விடு சரண்.
அவசரப்படுத்தினால் தொடர்பையே நிறுத்திவிடப் போகிறான் இந்த செல்வா. மெள்ள மெதுவாக, நின்று நிதானமாக தொடர்வோம்.
ஆனால் சரணே ஆச்சரியப்படும்படியாக ஒரு விஷயம் நடந்தது.
செல்வாவிடமிருந்து அந்த செய்தி வந்தது. சரணே மகிழ்ச்சி அடையும்படியான அந்த செய்தி, “வீடியோ கால்?” எனக் கேட்டது.
கேக்கணுமா இதை என்று லாப்டாப் முன்னால் அமர்ந்துவிட்டான் சரண்.
“ஷ்யூர்” என்று பதிலை அனுப்பிவிட்டு.
“ஹாய்”, என்றான் செல்வா. உலகத்தின் அந்தப் பக்கம் இருந்து கொண்டு.
“ஹாய்” என்றான் சரண் பதிலுக்கு. கட்டுப் போடாத கையை காற்றில் வீசினான்.
செல்வாவின் முகம் இந்தியாவில் இருந்ததை விடக் கொஞ்சம் அதிகம் பளிச்சிட்டது போல் தோன்றியது சரணுக்கு. டாலர்கள் தந்த வெளிச்சம்.
“தீப்தி, உன் நணபன் சரண்”, உட்புறம் நோக்கி அழைத்தான் செல்வா.
சரணின் கைக்கட்டை கவனித்துவிட்டான். “என்ன சரண் பேண்டேஜ்?”
“நத்திங். சின்ன விபத்து.” உதடுகள் இயந்திரத்தனமாக உச்சரிக்க, உள்ளம் தீப்தியை திரையில் காணத் துடித்தது. சற்றே அதிகரித்த வேகத்தில்.
திரையில் தீப்தி முகம் தெரிய, “ஹலோ சரண்” அவள் குரல் ஒலிக்க, இங்கே சரணின் இதயம் இடம் மாறியது.
“ஹாய் தீப்தி”, சரணின் கம்மிய குரல் அவனுக்கே புதிதாக இருந்தது.
“எப்டி இருக்கே சரண்? அதென்ன கட்டு?”
தனக்கு தலைவலி என்றால் அவளுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்.
ஆனால் இப்போது எதிர்புற அரைக் கோளத்தில் இருந்துகொண்டு அலட்சியமாக விசாரிக்கிறாள்.
“சின்ன விபத்து”, என்றான் சரண்,
“எங்கே கையைக் காட்டு? காயம் பலமில்லையே?”
“கொஞ்சம் ப்ராக்ச்சர். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” உன் கண்ணுக்குத் தெரியும் என் உடல் மேலான காயங்களை விசாரிக்கிறாயே பெண்ணே? கண்களுக்குப் புலப்படாமல் என் மனதுக்குள் வலி தந்து கொண்டிருக்கும் காயங்கள் உனக்குப் புரிபடாதா?
“காமிராவை சரியா வை சரண். சரியா தெரியலை.” கண்களை சிமிட்டினாள் தீப்தி.
“ஓகே. நீ நீ பேசு செல்வா”, சட்டெனத் திரையை விட்டு மறைந்தாள் – சரண் காமிராவை சரி செய்து கொண்டிருக்கும்போதே.
“அப்புறம் சரண்? நீங்க சிங்கராமே?” செல்வா தொடர்ந்தான்.
“ம்.”
“எந்த சினிமா? என்னப் பாட்டு?”
“கச்சேரியில்தான் பாடறேன். சினிமா வாய்ப்பு இன்னும் சிக்கலை.”
“ஓ.. ஐ சீ.., வெல், அப்புறம் பாக்கலாமா?” செல்வா பேச்சை முடிப்பதில் குறியாக இருந்தான்.
அருகில் இருக்கும் அழகிய பெண்ணின் ஆண் நண்பனுடன் உரையாடுவதில் எந்த ஆணுக்குதான் பிடிக்கும்?
சரணுக்கோ, “செல்வா பேசு. இன்னும் பேசு. பேசிக்கொண்டே இரு. தீப்தியை மீண்டும் அழை.
அவள் முகத்தை நான் பார்க்க வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.”
சொற்களாக மாறாத எண்ணங்களால் என்ன பயன்?
ஆனால், சமயத்தில் நினைப்பது நடக்கிற மாதிரிதான் தெரிகிறது.
தீப்தி மீண்டும் திரையில் வந்தாள். முகம் கழுவி விட்டு வந்திருப்பது போல் தோன்றியது சரணுக்கு.
வந்தவள் இயல்பாக செல்வாவின் தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டு, “அப்புறம் சரண்?” என்றாள்.
கண்ணுக்குள் தீயைப் பற்ற வைத்தது போல் இருந்தது சரணுக்கு.
கவனம் சிதற, சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை சரணால்.
“ஹலோ சரண்?” விரலை சொடுக்கினாள் தீப்தி.
கண்ணும் கவனமும் செல்வாவின் தோளில் கிடந்த தீப்தியின் கைகள் மேலேயே நிலைக்க, வார்த்தைகளை இழந்திருந்தான் சரண்.
“பேபி, இந்தியாவில் இது தூங்குவதற்கான நேரம். உன் நண்பனோடு பிறகு பேசு.” தீப்தியிடம் சொல்லிவிட்டு,
“பை சரண். குட் நைட்.” – திரை அணைந்தது,
சரண் மனமோ பற்றிக் கொண்டது,
பேபியாமே பேபி. டாமிட்!
குத்திய குத்தில் செல்வாவின் உதடு கிழிந்து, பற்கள் கழன்று, ரத்தம் வடிந்தது – சரணின் கனவில்!

தீப்தியின் முகத்தை திரையில் பார்த்ததில் சரணிடம் கொஞ்சம் உற்சாகம். அவள் தன்னுடன் பேசியதில் கொஞ்சம் மகிழ்ச்சி.
தீப்தியின் கோபத்தை விரைவிலேயே சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை.
எதையும் நேரம் காலம் பார்த்து செய்யணும் என்பது இந்த அயல் தேச வாசிகள் விஷயத்தில் மிக மிக உண்மை.
நாம் விழித்திருக்கும்போது அவர்கள் தூங்கி வழிந்துகொண்டு இருப்பார்கள்.
அவர்கள் விழித்திருக்கும்போது அவர்களை தொடர்புகொள்ள வேண்டுமெனில் நாம் நட்ட நடு நிசியில் அலர்ட்டாக இருந்தாக வேண்டும்.
இதன் காரணமாக சரணும் சட்டென்று தீப்திக்கு போன் செய்துவிடவில்லை.
அன்று வீடியோவில் பேசிய பிறகு உடனேயே தீப்திக்கு “ஹாய்”, “ஸாரி”, “உன்னுடன் பேச வேண்டும்”, “தயவு செய்து என்னுடன் பேசு” என்று டஜன் கணக்கில் செய்திகளை அனுப்பினான் சரண்.
ஆனால் அனைத்துமே கிணற்றில் போட்ட கல்.
சரி என்று நேரங்காலம் பார்த்து அவளை அலைபேசியில் அழைத்தான், எடுக்கப்படவில்லை.
“என்ன வந்தது இவளுக்கு? வீடியோவில் மட்டும் பேசினாள். இப்போ போனை மட்டும் எடுக்கவே மாட்டேன் என்கிறாள்? அமெரிக்கா போனதும் அரை லூஸாகி விட்டாளா என்ன?”
சரணுக்கு கோபம் கோபமாக வந்தது.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடலாம்.
செல்வாவையே பிடிப்போம்.
நினைத்த உடனே செல்வாவிற்கு ஒரு “ஹாய்” தட்டினான் சரண்.
“ஹாய் ட்யூட், வாட்ஸப்?”
இந்த ட்யூட், வாட்ஸப் என்னும் வார்த்தைகளை கண்டுபிடித்தவனை எண்ணெய் கொப்பரையில் தள்ளி…
சபித்தான் சரண்.
என்ன விஷயம்னு கேக்கிறானே? என்ன சொல்வது?
“இன்னிக்கு உலக பூனைக்குட்டி தினம். அதைக் கொண்டாட உங்களுக்கு இதோ சூப்பரான ஒரு பாட்டு.” காலையில் மிர்ச்சி அறிவித்ததைக் கேட்க நேர்ந்திருந்தது சரணுக்கு.
இது போதும்.
“உலக பூனைக்குட்டி தின வாழ்த்துகள் செல்வா.” செய்தி பறந்தது,
செல்வாவுக்கு சரணிடமிருந்து.
“வ்வாட்?” – இது செல்வாவின் பதில் கேள்வி.
பார்த்தான் சரண்.
தேடிப் பிடித்து ஒரு ஸ்மைலிங் பூனைக்குட்டி எமோஜியை அனுப்பி வைத்தான்.
பிற்சேர்க்கையாக, “ஹேப்பி கேட்ஸ் டே” என்னும் வாழ்த்தையும் தட்டிவிட்டான்
.
ஒரு சில வினாடிகள் தாமதத்திற்குப் பிறகு “ஸேம் டு யூ” இது போதாதா சரணுக்கு?
பூனையின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
“தீப்திக்கு பூனைன்னா ரொம்ப பிடிக்கும். நான் அவளுக்கும் பூனைக்குட்டி தின வாழ்த்து சொல்லணும். நீங்க வீடியோவில் வர முடியுமா? தீப்தியைக் கொஞ்சம் கூப்பிட முடியுமா?”
“தீப்தி”, செல்வா அழைத்தான். தீப்தி வந்தாள் வீடியோவில்.
பார்த்ததும் உருகினான் சரண்.
அவளும் சரணுக்கு ஒரு “வாட்ஸப்?”
இந்த வார்த்தையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட!
“ஹேப்பி கேட்ஸ் டே தீப்தி”, சொன்ன சரணின் முகமெல்லாம் புன்னகை. முப்பத்தியிரண்டு பற்களின் கடை.
“வ்வாட்??” இது தீப்தியிடமிருந்து.
“உனக்கு பூனைகக்குட்டின்னா பிடிக்கும்ல தீப்தி?”
“யார் சொன்னா?”
“நீதான்.”
“எப்போ?”
“அன்னைக்கு கோவில்ல.”
“கோவில்ல? பூனைக்குட்டியா? யானைக்குட்டியா?”
“அ.. அது… யானைக்குட்டிதான். பக்கத்துல பூனைக்குட்டியும்.”
சரணின் பார்வை “யானைக்குட்டி” என்று சொல்லும்போது செல்வாவின் மீதும். பூனைக்குட்டி என்று சொல்லும்போது தீப்தி மீதும் விழுந்தது.
சரணின் நக்கல் செல்வாவிற்கு புரிந்திருக்காது.
தீப்திக்கு புரிந்திருக்க வேண்டும்.
“செல்வா, நீ டயட்டில் இருக்க வேண்டும்” என்றாள் திடீரென்று.
சிரிக்காமல் இருக்க சிரமப்பட்டான் சரண்.
“உங்கப் பூனைக்குட்டி தின கொண்டாட்டத்தில் என்னை ஏன் இழுக்கிறாய்?” செல்வாவிடம் சலிப்பு.
அதே சலிப்புடனே, “ஓகே சரண். முக்கியமான மீட்டிங் எனக்கு. இன்னும் 5 நிமிஷத்தில். ஆன்லைனில்தான். ஸோ, சீ யூ ட்யூட்! தீப்தி, உன் நண்பனுக்கு பை சொல்லு.”
தீப்தியின் “பை”யும் கையசைப்பும் வினாடி கூட நிலைக்கும் முன்பே, இணைப்பை முடித்துவிட்டான் செல்வா.
யானை – பூனை ஜோக் புரியலைன்னாலும், தீப்தி சரணிடம் பேசுவதை மட்டும் கத்திரிக்கும் அளவுக்கு செல்வா புத்திசாலியாகத்தான் இருந்தான்.
இந்த விஷயத்தில் எல்லா ஆணுமே புத்திசாலிதான். அட, ஆண்கள் என்ன? பெண்கள் கூட இந்த விஷயத்தில் புத்திசாலிதான்.
வழக்கம் போல. தீப்திக்கு செய்திகள் அனுப்புவதை விடவில்லை. வழக்கம் போல பதில் அளிக்காமல் இருக்கும் பிடிவாதத்தை அவளும் விடவில்லை.
போடுகிற கோடு, ரோடாகும் என சரண் எதிர்பார்த்தால், அது சுழலும் வட்டமாகி தொடங்கியப் புள்ளியிலேயே சென்று நின்றது ஆகப் பெரிய வேதனை.
பூனைக்குட்டி தினம் மாதிரி ஏதாவது எலிக்குட்டி தினம் கிடைக்குமா என்று சரண் தேடிக் கொண்டிருக்கையில், அதற்கு அவசியமே இல்லாமல் செல்வாவிடமிருந்தே செய்தி வந்தது.
“உன்னுடன் வீடியோவில் பேச வேண்டும் சரண். இந்த ஞாயிற்றுக் கிழமை ஓகேவா?”
“ஓகேவா? ஓகே ஓகே. ஓராயிரம் ஓகே” என்று பதில் செய்தி அனுப்பினான் சரண்.
இந்த முறை தீப்தியிடம் பேசும் போது எப்படியும் தன் மீதான அவள் கோபத்தை அழித்தே ஆக வேண்டும்.
தீர்மானித்த சரண், அந்த ஞாயிற்றுக் கிழமை, தீப்தி ஒரு முறை தன் பிறந்த நாளுக்கான தீப்தி பரிசளித்திருந்த இள நீல சட்டைய போட்டுக்கொண்டு லேப்டாப் முன்னால், அமர்ந்தான்.
லாகின் செய்துவிட்டு வால்பேப்பர் வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணினான்.
அவனை அதிக நேரம் நட்சத்திரங்களை எண்ண விடவில்லை நேரம். செல்வாவின் அழைப்பு சற்று நேரத்திலேயே ஒலித்தது.
பச்சை பட்டனை தட்டிவிட்டு, “ஹாய்”, என கையசைத்த சரண், செல்வா – தீப்தி ஜோடியைப் பார்த்ததும் பொசுங்கினான். புகைந்தான்.
பொசுங்கலும், புகைச்சலும் அதிகம் என்றாலும், அன்றைக்கு அவை வழக்கத்தை விட அதிகம்.
காரணம் தீப்தி, செல்வாவிடம் தெரிந்த நெருக்கம் அன்றைக்கு வழக்கத்தை விட அதிகம்.
“ஹாய் சரண்!” – என்னது இது, செல்வாவின் உற்சாகமும் வழக்கத்தை விட அதிகமோ அதிகம்?
“சொல்லு தீப்தி!”
“நீ சொல்லு செல்வா.”
“நீ சொல்லு தீப்தி.”
செல்வாவின் தோளை இடித்தாள் தீப்தி.
“நோ.. நோ.. பெண்கள் முதலில். நீ சொல்லு”, செல்வாவும் பதிலுக்கு தீப்தியின் தோளை இடித்தான்
.
சொல்லத் தேவையின்றி இந்தக் களேபரம் சரணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பெரும் எரிச்சலைத் தந்தது.
“யாராவது சொல்லுங்க. என் தலை வெடித்துவிடும் முன்”, இயல்பாக புன்னகைக்க முற்பட்டு, ஏனோதானோவென்று இளித்து வைத்தான் சரண்.
“வீ ஆர் எங்கேஜ்டு” தன் கையை உயர்த்தி திரையில் தெரிவித்தாள்.
அந்த பிளாட்டின மோதிரம் அவளின் விரலில் கர்வமாக அமர்ந்திருந்தது.
சரணை இடி தாக்கியது என சொல்லலாம். வெடி தாக்கியது என சொல்லலாம். எது சொன்னாலும் அது குறைச்சலே.
“சீக்கிரமே எங்க கல்யாணம் சரண்”, செல்வாவின் கரம் தீப்தியின் மோதிரக் கையை உரிமையோடு பற்றியது
“சந்தோஷமான விஷயம். இல்லை சரண்?”
தீப்தியின் அந்தக் கேள்வி சரணின் காதில் விழுந்ததா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம்.
சொல்லப்போனால் தீப்தியும் செல்வாவும் தொடர்ந்து பேசிய “ப்ளோரிடாவில் திருமணம்” என்னும் எழுதப்படப் போகிற எந்த விவரமும் சரணின் காதுகளில் விழவே இல்லை.
சிலையானவன், நினைவு மீள வெகு நேரமாயிற்று.
மீண்ட நினைவும் அந்தக் கணத்தை சந்திக்கவில்லை. மாறாக தீப்தியை முதலில் சந்தித்த தினத்தை வருடியது.
அதைத் தொடர்ந்த அந்த நினைவகலா ஞாபகங்களை பற்றிப் படர்ந்தது.
அது ஒரு இனிய தோழமையின் இன்னினிய ஆரம்பம்….
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.