தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 21

கல்பனா சன்னாசி

அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7 அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9 அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11 அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13 அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15 அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17 அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19 அத்தியாயம் - 20

மொத்த வகுப்பும் அதிர்ந்து போனது, சரணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்பா, அம்மாவுக்கு அவன் உயிர். அதிர்ந்து ஒரு அதட்டல் கூடப் போட்டதில்லை சரணை அவர்கள். பெற்றவர் என்ன? மற்றவர் கூட எவரும் இதுவரை அவனை உரசியதில்லை. அவனும் அது மாதிரி தவறாக நடந்து கொள்கிறவனில்லை.

அதுவும் குறிப்பாக பெண்களிடம்.

இப்படி அவன் வாழ்வின் முதல் அறை, சொல்லப் போனால் ஒரே ஒரு அறை (இது நாள் வரையிலான அவனின் இருபது வயது வாழ்வில்) ஒரு பெண்ணிடமிருந்து தனக்கு வீசப்பட்டதை அவன் புரிந்துகொள்ளவே சில நிமிடமாயிற்று. அவன் சுதாரித்து ஏதும் பதில் பேசும் முன் தீப்தி புயலாக வகுப்பறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அதிர்ந்து கிடந்த வகுப்பறை, முதல் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக அடுத்ததாக ஒரு பேரதிர்வு நிகழ்ந்தேறியது.

வினோத்தின் கன்னத்தில் வேகமாக ஒரு அறை விட்டான் சரண்.

அத்தனை மாணவர்களும், மாணவிகளும், அப்போதைக்கு கால்குலஸை கைகழுவிவிட்ட வரதராஜனும், சிலையாகிப் போனார்கள்.

வினோத்தின் நிலைமையைப் பற்றி சொல்லத் தேவையே இல்லை.

பொறிகலங்கிப் போய்விட்டான்.

வாங்கிய அறையின் உக்கிரத்தில் தடுமாறி விழப் போன சட்டைக் காலரைப் பிடித்திழுத்தான் சரண்.

“சொல்லுடா..” வினோத்தை பார்த்து உருமினான்.

“என்ன சொல்லணும்?” வினோத் கேள்வியை முடிக்கும் முன்பே, அவன் மேல் சரணின் கைகள் இன்னொரு முறை இடியாக இறங்கின.

“சொல்றேன். சொல்றேன். சொல்லிடுறேன்…”, கதி கலங்கினான் வினோத்.

“இங்க வந்து சொல்லு” வினோத்தை அவன் டெஸ்க்கில் இருந்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து, வகுப்புக்கு முன்னால், வரதராஜன் பக்கத்தில் கொண்டு நிறுத்தினான்.

தான் தீப்தியின் வெற்று முதுகை தடவியதையும், கிள்ளியதையும் சரணின் அடிகளுக்கிடையே தடுமாறியபடியே சொல்லி முடித்தான் வினோத்.

“இன்னொரு தடவை எந்தப் பொண்ணுகிட்டேயாவது இப்டி பண்ணே? என் அடி உனக்கு ஞாபகம் வரணும்.” கடைசியாக ஒரு அடியை வினோத்தின் மேல் வீசிவிட்டு, கைப்பிடிக்குள் இருந்த அவனை உதறினான்.

“ஸாரி சார். உடனடி விளக்கமும் உடனடி செயலும் தேவைப்பட்டதால உங்க முன்னாடியே… நான்… ஸாரி சார்..”, வரதராஜனிடம் சரண் சொல்ல வேண்டியதாயிற்று.

“இட்ஸ் ஓகே. ஐ அண்டர்ஸ்டாண்ட்”, வரதராஜன் சொன்னாலும் மேலே வகுப்பைத் தொடர முடியவில்லை அவரால்.

“கம் வித் மி. லெட்ஸ் மீட் தி ப்ரின்சிபல்”, வினோத்தை நோக்கி ஆணையிட்டார்.

வரதராஜன் முன்னால் செல்ல, “போடா” என்ற சரணின் அதட்டல் செலுத்திவிட அவரைப் பின் தொடர்ந்தான் வினோத், சரணை முறைத்தபடியே.

இருவரும் அகன்றதும், சரண் மற்றவர்களை நோக்கினான். “ஸாரி ப்ரெண்ட்ஸ். மானப் ப்ரச்சனை. தன்மானப் ப்ரச்சனை. அதான் வன்முறையை கையில் எடுக்க வேண்டியதாயிடுச்சி. ஸாரி கேர்ள்ஸ். அண்ட் ஆஷா! உன் ப்ரெண்ட் தீப்திகிட்ட உண்மையை சொல்லு. நான் கொலை கூடப் பண்ணாலும் பண்ணுவேன். ஆனா இந்த சரண், லேடி அப்யுஸர் இல்லைன்னு சொல்லு.”

படபடவென்று பேசிவிட்டு தடதடவென்று வெளியேறினான் சரண்.

ஆஷாவும் எழுந்து தேடப் போனாள் – இந்த தீப்தி எங்கே?

நூலகம் அமைதியாக இருந்தது. தேடோ தேடென்று தேடிக் கொண்டிருந்தான் சரண். தேடியப் புத்தகம் கிடைத்தபாடில்லை. அலமாரி அலமாரியாக புத்தகங்களை அலசினான். ஆனாலும் அவன் தேடிய “கால்குலஸ்” புத்தகம் அகப்படவில்லை.

மீனைத் தேடினால் வலையில் மான் மாட்டிய மாதிரி, நூலகத்தில் சரண் புத்தகத்தை தேடினால், கொத்துப் பூ மாதிரி தீப்தி தென்பட்டாள். அருகில் ஆஷாவோடு!

“தீப்தி உங்கிட்டப் பேசணுமாம்”, அறிவித்தாள் ஆஷா.

“ஒரு மண்ணும் வேணாம். ஆளை விடுங்க”, அகன்றான், நகர்ந்தான் சரண்.

தீப்தி முழங்கையில் இடிக்க சரண் பின்னாலேயே தொடர்ந்தாள் ஆஷா. அவள் பின்னாலேயே தீப்தி.

“அவ சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.”

“அன்னைக்கு வாங்குனது இன்னும் வலிக்குது. சும்மா தொணதொணன்னு என்னைத் தொடராதீங்க” கையை உயர்த்தி மறுப்பாக காட்டிவிட்டு மேலே நடந்தான்.

“என்னதான்னு கேளேன்.”

“இப்டியே பின்னாடி வந்தீங்க, அன்னிக்கு வாங்குனதை திருப்பிக் கொடுத்துடுவேன். ரெண்டு பேருக்கும்.”

“அம்மாடி”, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் ஆஷா.

சரண் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் தீப்தி, “என்ன திமிரு அவனுக்கு? நம்மளை அடிப்பேங்கிறான்.”

“செஞ்சாலும் செய்வான்”, ஆஷாவின் கை கன்னத்தில் வைத்தது வைத்ததுதான். எடுக்கவேயில்லை.

“அந்தப் பையன் சரண் அப்படியில்லேம்மா” என்றார் நூலக காப்பாளர், சற்றே முதியவர்.

“பின்னே எப்படியாம்?” ஆஷா, தீப்தி கோரஸ்.

“ரொம்ப நல்லவன்ம்மா. ஒரு தடவை இன்ஸ்பெக்ஷன். எனக்கு உடம்பு முடியலை. ராத்திரியோட ராத்திரியா அவனும் அவன் ப்ரெண்ட்ஸும் லைப்ரரியைப் புரட்டிப் போட்டு அடுக்கி வச்சு ஆடிட்டும் செஞ்சு கொடுத்தான். நல்லவன்ம்மா. நல்லாருக்கணும்.”

வாழ்த்தினார் முதியவர்.

கேட்ட தீப்தியிடம் ஒரு இளக்கம்.

“அந்த நல்லவன்கிட்ட நான் பேசியே ஆகணும் ஆஷா.”

“ம்? கண்டிப்பா பேசணுமா தீப்தி?” தீப்தியின் தலை ஆமாம் என்று பலமாக ஆடியது.

ஆஷாவின் கைகளோ இன்னமும் கன்னத்தில்.

“என்னால அடி வாங்க முடியாதும்மா” ஆஷா மறுத்தாலும்,

“ப்ளீஸ், ப்ளீஸ்”, என்ற தீப்தியின் நச்சரிப்பை அவளால் தாங்க முடியவில்லை.

இருவருமாக திருமபவும் படை எடுத்தனர் சரணை நோக்கி. இந்த முறை களம், கேண்டீன்!

“மாஸ்டர், டீ!” சரண் அறிவிக்க, அவனும் நண்பர்களுமாக கேண்டீன் மேஜையை ஆக்கிரமித்தார்கள்.

அடுத்த மேஜையிலிருந்து ஆஷா, தீப்தி கண்களாலேயே சரணின் நண்பர்களை விரட்டினார்கள். சரணுக்குத் தெரியாமல்!

“எங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா. நண்பர்கள் எழுந்துகொண்டனர்.

“என்ன வேலைடா? எனக்குத் தெரியாமல்?”

“அது.. ஸீக்ரெட்.”

“நானும் வர்றேண்டா”, எழ முற்பட்ட சரணின் தோளைப் பிடித்து அழுத்தி, “நீ இருந்து டீ சாப்டுட்டு வா, நாங்க கிளம்பறோம்” அவனை அமர்த்திய நண்பர்கள்,

“மாஸ்டர். ஒரே ஒரு டீ. சரணுக்கு மட்டும்.” மாஸ்டரைப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு, சரண் மேலும் ஏதும் விசாரிக்கும் முன் பறந்தார்கள்.

சரண் ஒன்றும் புரியாமல், மாஸ்டரின் முகத்தையும், தலை தெறிக்க ஓடுகிற நண்பர்களின் முதுகையும் மாறி மாறிப் பார்த்தான்.

தடாலென அவன் முன்னே வந்து அமர்ந்தார்கள். தீப்தியும் ஆஷாவும்.

அவர்களைப் பார்த்ததும் சரண் எழ முற்பட, “தம்பி டீ”, டம்ப்ளரை சரண் முன்னால் வைத்தார் மாஸ்டர்.

“உனக்குன்னு ஸ்பெஷலா போட்டேன். குடிச்சிட்டுப் போங்க தம்பி.”

மாஸ்டரின் பரிவை மறுக்க மனமின்றி, எழுந்த சரண் மறுபடியும் அமர்ந்துவிட்டான்.

“ம்?” ஆஷா தீப்தியை உசுப்பினாள்.

தொண்டையை செருமிக்கொண்ட தீப்தி, “சரண் நான்…” தீப்தி தொடரும் முன், “ஸ்டாப். ஸ்டாப். ஸ்டாப்.” சரண் இடைவெட்டினான்.

“எதுவும் சொல்லாதே. என் பேரையும் சொல்லிடாதே. நீ சொன்னா எல்லாமே, என் பேரே கசக்குது..”

“தீப்தி சொல்ல வந்ததை என்னன்னுதான் கேளேன் சரண்.”

“மாஸ்டர் பரிவா கொடுத்த டீயை பாதி மீதி வைக்க எனக்கு மனசில்லை.”

டீயை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினான் சரண்.

“மொத்த டீயும் நான் குடிச்சி முடிக்கிற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஊமை. நான் செவிடு. ஓகே?”

“ரொம்ப அலட்டாதே சரண்”, தீப்தி லேசாக கடுப்பானாள்.

“நான் செவிடு. நான் செவிடு“, டீயின் அளவு குறைந்தது.

“என்னைப் பேச விடுடா.”

“நான் செவிடு. நான் செவிடு. ஐயாம் டெஃப்.”

இப்படிக்கும் அப்படிக்குமாக தலையை ஆட்டியபடி சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னான் சரண்.

“டேய்… உன்னை….” கடுப்பான தீப்தி அவனை நோக்கி கையை ஓங்கவும்,

“எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.” என்ற சரண் “என்னவோ அவ எங்கிட்டப் பேசணும்னே? பாரு உன் தோழியை”, என்றான் ஆஷாவிடம்.
“அவ வாயால பேச மாட்டா. கையாலதான் பேசுவா”

காலி டீ டம்ளரை மேசை மேல் வைத்தவன்.

“நான் எஸ்கேப்.”

ஆஷா, தீப்தி இருவரையும் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டவன் ஓடியேப் போனான்.

அவன் போனதும், “சரண் தம்பி போயிருச்சா?” என்றபடியே வந்தார் டீ மாஸ்டர்.

“தம்பிகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்”, தொடர்ந்தார் – காலி டீ டம்ளட்களை சேகரித்துக்கொண்டே.

“ஒரு விஷயத்தை ஒருத்தரையும் சொல்ல விடமாட்டார் உங்க தொம்பி.” என்றாள் தீப்தி விரக்தியாக.

“தம்பி ரொம்ப நல்லவரும்மா. அவரை குறை சொன்னா நாக்கு அழுகிடும்”, வக்காலத்து வாங்கினார் டீ மாஸ்டர்.

“அப்படி என்ன செஞ்சார் உங்க தங்கக் கம்பி?”

“பண்டிகைக்கு நான் ஊருக்குப் போக முடியலை. கையிலயும் பணமில்லை. தம்பிதான் எங்க வீட்ல எல்லாருக்குமா புதுத் துணி எடுத்து அனுப்ச்சுது. பசங்களுக்கு ஷர்ட்டு பேண்ட்டெல்லாம் ரொம்ப புடிச்சிருந்துதாம். போன் பண்ணுச்சுங்க. தம்பிகிட்ட சொல்லலாம்னா…”

“பறந்துட்டாராக்கும்?” நொடித்தாள் தீப்தி.

“எங்கப் போயிட்டாரு? நானும் இருப்பேன். காலேஜும் இருக்கும். நாளைக்கு சொல்லிட்டாப் போச்சு, தம்பிகிட்ட விஷயத்தை?” பற்கள் தெரிய சிரித்தார் டீ மாஸ்டர்.

“சொன்னா சரிதான்” என்றாள் தீப்தி.

“சொல்லிடுவேன்மா”, என்றார் டீ மாஸ்டர், அப்பாவியாக!

“நீங்க சொல்லிடுவீங்க. நான்தான்….”, தீப்தி இழுக்க,

“நீயும் இருப்பே. சரணும் இருப்பான். காலேஜும் இருக்கும்.” கிண்டலடித்தாள் ஆஷா.

தீப்தி தலையில் கையை வைத்துக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *