அத்தியாயம் – 23
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
கல்லூரி, அலங்காரங்களால் அழகாகத் தெரிந்தது. அனைத்துக் கல்லூரிகள் கலைவிழாவை கொண்டாடிக் கொண்டிருந்தது சரணின் கல்லூரி.
திறந்த புல்வெளியில் ஓவியப் போட்டி, களிமண் சிலை செய்யும் போட்டி என களைகட்டி இருந்தது.
மற்ற கல்லூரி மாணவ மாணவிகள் வந்து மைதானத்தில் கூடாரம் போட்டிருந்தார்கள்.
அலப்பறைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது அந்தப் பிரதேசம்.
சரண் ஆடிட்டோரியத்தில் அடைக்கலமாகி இருந்தான் – பாட்டுப் போட்டியைக் கேட்பதற்காக.
“சரஸ்வதி இசைக் கல்லூரியின் தியாகு இப்போது பாடுவார்.”
ஒலிபெருக்கி அறிவித்தது. அதோடு நிற்கவில்லை அந்த ஒலிபெருக்கி. “பாட்டுப் போட்டியின் அடுத்தப் போட்டியாளர் சரண் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.”
திடுக்கிட்டுப் போனான் சரண். அதற்குள் நண்பர்கள், “நல்லாப் பாடுடா. நம்ம காலேஜ் மானத்தைக் காப்பாத்துறா” உசுப்பேற்ற ஆரம்பித்தனர்.
சரணோ, “நான் பேரே கொடுக்கலைடா” அங்கலாய்த்தவன், “டேய், நீ கொடுத்தியாடா எம் பேரை? நீ? நீயா?” என்று விசாரணையில் இறங்கினான்.
“நானில்லை. நானில்லைப்பா” என்று அனைவரும் கையை விரித்தனர்.
“நான் பாடப் போறதில்லை. இப்டி திடீர்னு பாடுன்னா?”
“டேய். உன் பேரைக் கூப்ட்டு நீ போகலைன்னா காலேஜ் கௌரவம் பறந்துடும்டா.”
“அதுக்குன்னு? இப்டி தடக்குன்னு பாட சொன்னா எப்டி பாடுறது? பாரு ஒவ்வொருத்தரும் ஸ… ரி… க… ம…ன்னு பொளந்து கட்றாங்க.”
உண்மையிலேயே மேடையில் அந்த தியாகு ஏழு ஸ்வரங்களையும் பின்னிப் பெடல் எடுத்துக் கொண்டிருந்தான்.
நடுவர்கள் கண்களை மூடி தலைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் கண்ணிலிருந்து கண்ணீரேக் கொட்டியது.
பார்த்த சரண் பக்கென்று ஆனான். “எல்லாம் முறையா பாட்டுக் கத்துக்கிட்டவங்க. எனக்கு ‘ஸ’வும் தெரியாது. ‘ரி’யும் தெரியாது. பாடவே சரியாத் தெரியாது. நான் பாடப் போறதில்லை.”
“பயந்தாங்குளி. பயந்தாங்க்குளி. அதுக்கு எதுக்குப் பேரைக் கொடுக்காணுமாம்?”
குரல் கேட்டுத் திரும்பினான் சரண், பின் வரிசை நாற்காலியில் நக்கலாக சிரித்தபடி தீப்தி.
“யாரு? யாரு பயந்தாங்குளி? வீரத் தமிழ் பரம்பரை தெரியுமா? யானையையே ஜெயிச்சவரு தாத்தா. பூனையையே, ஸாரி, ஐ மீன் புலியையே விரட்டுனவங்க என் பாட்டி. தெரியுமா?” சரண் தோள்களைத் தட்டினான்.
அதற்குள். “அடுத்ததாகப் பாட வருகிறார் நமது கல்லூரி சரண்.” அறிவித்தது ஒலி பெருக்கி.
“ஹலோ வீரத் தமிழ் பரம்பரை! உங்களைத்தான் கூப்டுறாங்க. போங்க!”
அதற்குள் சொந்தக் கல்லூரி என்றதும் கை தட்டலும் விசிலும் பறந்தது.
முதல் கை தட்டல் மற்றும் முதல் விசில் தீப்தியினுடையது, என்று சொல்லத் தேவையே இல்லை.
“என்னடா பண்றது?” என்று நண்பர்களை நோக்கி ஒரு கேள்வியை வீசியபடி மேடைக்கு ஓடினான் சரண்.
“மச்சான் நம்ம கானாப் பாட்டு எதுனா எட்த்து வுடு” ஒலித்த ஒரு நட்புக் குரல் அவனை மேடை ஏற்றிவிட்டது.
மைக்கைப் பிடிக்கும் வரைதான் தயக்கம் தடவிக் கொண்டிருந்தது சரணை.
தொண்டையை ஒரு முறை செருமிக் கொண்டான்.
அப்புறம் நடந்தது கானா கலாட்டா. சரணின் பாட்டு கலாட்டா.
எடுத்த எடுப்பிலேயே உச்சஸ்தாயில் தொடங்கியது. சரணின் உள்ளூர் கானா. தொடர்ந்து அவன் பாடிய கிட்டத்தட்ட ஒரு வகையான “கானா கம் ராப்” எல்லாரையும் எழுப்பி விட்டுவிட்டது.
இளைஞர் பட்டாளம் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது.
நடுவர்களிடம் கூட இவன் பாடிய உற்சாகப் பாடல் ஒரு புன்சிரிப்பை வரவழைத்துவிட்டது,
வேக வேகமான தாள கதியில் இவன் பாட கேட்டவர்களின் கால்களை மேளம் வாசிக்க வைத்தது,
தடதடவென்று பாடி அரங்கத்தை அதிரவைத்தான் சரண்.
அவன் பாடி முடித்ததும் விசில் பறந்தது. ஒருவன் மேடைக்கே ஓடி வந்து சரணுக்கு அப்போதைக்கு உடனடியாக தயாரான ஒரு வண்ணக் காகித மாலையை மாட்டிவிட்டான்.
ஒரு மாணவி ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். இன்னொருத்தி வந்து அவன் கன்னத்தை வருடி திருஷ்டி கழித்தாள்.
சரண் மேடையை விட்டு இறங்கியதும் நண்பர்கள் கூடி அவனைத் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கூத்தாடினர்.
சரணே எதிர்பார்க்கவில்லை.

வந்து இருக்கைக்கு திரும்பிய சரண், முதல் காரியமாக தீப்தியைப் பார்த்து “பாத்தீல்ல? அய்யா பாடினதுல ஆடிட்டோரியமே சும்மா அதிருதுல்ல?” என்றான் கர்வமாக.
அவளோ, “ரிசல்ட்டை சொல்லட்டும். பாப்போம். யாரு ஜெயிக்கிறாங்கன்னு?”
“ஹலோ. பாடுறது மட்டும்தான் பேச்சு. ஜெயிக்கிறது இல்ல.”
“தோத்தாங்குளி. தோத்தாங்குளி.”
“முதல்ல பயந்தாங்குளின்னு சொன்னே. இப்ப தோத்தாங்குளின்னு சொல்றே. ஏதாச்சும் சொல்லிகிட்டே இருப்ப நீ. போடி.”
“என்னது ‘டி’யா?”
“ஆமாண்டி அடாவடி.”
“அடப்போடா அனகோண்டா.”
இருவரின் “மரியாதையான” பேச்சுவார்த்தையை மேலும் தொடர விடாமல் ஒலிபெருக்கி குறுக்கிட்டது.
“பாட்டுப் போட்டி முடிவுகள்”, முதல் இடம் சரஸ்வதி இசைக் கல்லூரி தியாகு.”
வந்திருந்த கொஞ்ச எண்ணிக்கை சரஸ்வதி இசைக் கல்லூரியினர் கைத்தட்டினார்கள்.
“இரண்டாவது இடம் நம்ம காலேஜ் சிங்கர் சரண்.”
சரணே எதிர்பார்க்கவில்லை அதை.
“ஓ” என்று இரைச்சலை எழுப்பி ஆரவாரம் செய்தது மொத்தக் கல்லூரியும்.
“தோத்தாங்குளின்னியே? பாத்தியா எங்கத் தலைவரை? ஜெயிச்சிட்டான்ல?” சரணின் சார்பாக தீப்தியிடம் மார் தட்டினான் சரணின் நணபன் ஒருவன்.
“செகண்ட் ப்ளேஸ்தான?” என்று நொடித்தாள் தீப்தி, அரங்கத்தை விட்டு வெளியேறியபடி.
“செகண்ட் ப்ரைஸ் மட்டும் சும்மா கொடுத்துடுவாங்களா என்ன? நான் நல்லாப் பாடினேன். அதான்” என்றான் சரண் தீப்தியைப் பின் தொடர்ந்தபடி.
“என்ன சொன்னாலும் ரெண்டாவது ரெண்டாவதுதான். நோ படி ரெமெம்பர்ஸ் தெ நேம் ஆஃப் ரன்னர்ஸ் அப். உலகம் வின்னரை மட்டும்தான் நினைவில் வைக்கும்.” தீப்தி நடந்துகொண்டே இருந்தாள்.
“அவமானம். மிகப் பெரிய அவமானம். எல்லாம் அந்தப் பரதேசியால வந்தது.” சரண் தொடர்ந்து கொண்டே இருந்தான்.
“எந்தப் பரதேசி?” நிற்கவில்லை தீப்தி.
“எந்தப் பரதேசி போட்டிக்கு எம் பேரை கொடுத்துச்சோ அந்தப் பரதேசி.”
நின்றுவிட்டாள் தீப்தி. “யாருன்னு தெரிஞ்சு என்ன செய்யப் போறே?”
“கையில மட்டும் சிக்குனான்.. அவன் கொத்து பரோட்டாதான்.”
ஒரு நிமிடம் சரணை ஏறிட்ட தீப்தி, “ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு நடையைக் கட்டினாள்.
“எதுக்கு?” என்றான் சரண், போகிறவளின் முதுகைப் பார்த்தபடி.
“ம்?” கொத்து பரோட்டாக்கு.” பதிலைக் காற்றில் வீசிவிட்டு கடந்து போனது தீப்தியின் வானவில் வண்ணத் துப்பட்டா.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.