அத்தியாயம் – 24
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
யார் கொடுத்திருப்பா? நம்ம பேரை பாட்டுப் போட்டிக்கு?
யாராக இருக்கும் அந்த பரோட்டா?
யோசிக்க யோசிக்க சரணுக்கு மண்டை காய்ந்தது.
மனதில் குறுகுறுத்தக் கேள்வியை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் பந்தி வைத்தான்,
“யாருப்பா அந்த பரோட்டா?” காலையில் வீட்டுப் புல்வெளியில் தண்டால் எடுத்துக்கொண்டே அப்பாவைக் கேட்டான்.
குனிய முடியாமல் குனிந்து, நிமிர முடியாமல் நிமிர்ந்து கொண்டிருந்த அவர், “எந்தப் பரோட்டா?” என்றார்,
“அதாம்ப்பா, பாட்டுப் போட்டிக்கு என் பேரை கொடுத்த துரோகி.”
“துரோகின்னு ஏன் சொல்றே? அதான் ஜெயிச்சிட்டீல்ல? அதனால நண்பன்னு சொல்லு அந்தப் பரோட்டாவை.”
“ஆனாலும் யாருன்னு தெரியாம மண்டை வெடிக்குது” தனக்குள் புலம்பிக்கொண்டான் சரண்.
அப்போதைக்கு கம்மென்று இருந்துவிட்டாலும், சரணின் பரோட்டா புலம்பலில் இருந்து அவன் அம்மாவும் தப்பிடவில்லை.
அடுக்களையில் உருட்டிக் கொண்டிருந்த அவளிடம், “யாரா இருக்கும்மா அந்தப் பரோட்டா?” என்றான்.
அவளோ, “நான் பரோட்டா செய்யலை. பூரிதான் செய்றேன்.”
“அதில்லைம்மா. நான் கேட்டது..”
“பரோட்டாதானே? நாளைக்கு செஞ்சு தர்றேன் சரண்”, என்றாள் அம்மா பூரி மாவை உருட்டிக்கொண்டே.
வகுப்பில் வரதராஜன் சொன்னது எதுவும் அவன் காதில் விழவில்லை.
கரும்பலகையில் அவர் வரைந்த தீட்டா வட்டங்கள் கூட அவனுக்கு குட்டி குட்டி பரோட்டாக்களாகத் தெரிந்தன.
“வாட் இஸ் தி ஆன்சர் சரண்?” திடுமென்ற வரதராஜனின் கேள்விக்கு, “எக்ஸ் இஸ் ஈக்வல் டூ… பரோட்டா சார்” என்று பதிலளித்தான்.
மொத்த வகுப்பும் சிரித்தது. தீப்தி கொஞ்சம் அதிகமாகவே சிரித்தது போலத் தோன்றியது சரணுக்கு,
“நீயாடா அந்த பரோட்டா?” மைதானத்தில் விளையாடும்போது நண்பன் ஒருவனின் சட்டைக் காலரைப் பிடித்தான் சரண்.
அவனோ, “சீனியர் சித்ராதான் போட்டிக்கெல்லாம் பார்ட்டிசிபன்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணாங்க. அவங்களைக் கேளு. இப்ப என் சட்டையை விடு.”
சீனியர் சித்ராவோ, “உன் கிளாஸ்மேட்தான் யாரோ வந்து உன் பேரைக் கொடுத்தாங்க. இட் வாஸ் எ கேர்ள். பேரு ஞாபகம் இல்லை.”
கிளாஸ்மேட்டா? பெண்ணா?
முட்டைக் கண்ணாடி போட்ட ஆஷா ஞாபகம் வந்தாள்.
புல்வெளியில் தீப்தியோடு, தன் வீட்டுப் புளி சாதத்தை பங்கு வைத்துக் கொண்டிருந்த ஆஷாவை நெருங்கினான் சரண்.
“நீதான் பாட்டுப் போட்டிக்கு என் பேரை கொடுத்தியா ஆஷா?”
“நானில்லை சரண்” என்றாள் ஆஷா புளி சாதத்தை விழுங்கிக்கொண்டே.
“உண்மையை சொல்றியா… இல்லே?” ஆஷாவின் காதைப் பிடித்துத் திருகினான் சரண்.
“வலிக்குது. வலிக்குது. வலிக்குது. நான் இல்லை. நான் இல்லை. சத்தியமா நான் இல்லை” அலறினாள் ஆஷா.
“நீயில்லைன்னா யாரு?” ஆஷாவின் காதை அதிகமாகத் திருகினான் சரண்.
“அவளை விடு சரண். பாவம்.”
“அவ இல்லேன்னா? அப்ப நீயா?” சரணுக்குள் சட்டென்று உதித்தது.
“ஏய் தீப்தி, நீ. நீதான் அந்த பரோட்டாவா? உன்னை..” ஆஷாவின் காதை விட்டுவிட்டு தீப்தியின் காதைப் பிடித்தான் சரண்.
“என்னை மாட்டி விடணும்னுதானே என் பேரைக் கொடுத்தே?”
“இல்லைடா. இல்லைடா. முதல்ல காதை விடு. வலிக்குது.”
“விட மாட்டேன். நான் தோக்கணும்னு என் பேரைக் கொடுத்தேல்ல? உன்னை, உன் காதை இன்னும் நல்லாத் திருகுவேன்.”
“தோக்கணும்னு இல்லை. நீ ஜெயிக்கணும்னுதான் உன் பேரைக் கொடுத்தேன்”, காது வலியோடு கத்தினாள் தீப்தி.
அவள் கத்தலில் மொத்தக் கல்லூரியின் கவனமும் அந்தப் பக்கம் திரும்பியது.
“நான் ஜெயிக்கணும்னு நினைச்சியா? நீயா?”
“ஆமாண்டா மக்கு சரண்.”
“நான் சுமாரா பாடுவேன்னு உனக்கெப்படி தெரியும்?”
“நம்ப கேம்பஸ் நாய்க்குட்டிக்கு கூடத் தெரியும் உன் வாய் எப்பவும் ஏதாவது ஹம் பண்ணிக்கிட்டேதான் இருக்கும்னு”, பார்த்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் பதிலளித்தான்.
“அவ்ளோ பிரபலமா என் பாட்டு?”
“ஆமாண்டா மக்கு சரண்.”
“திரும்ப திரும்ப மக்குன்னு சொன்னே, காது இருக்காது பாத்துக்கோ.”
“அப்டிதாண்டா சொல்லுவேன் மக்கு சரண். மக்கு சரண்…”
தீப்தி ஓட, சரண் துரத்த, இன்னுமொரு டாம்-ஜெர்ரி எபிசோடு தொடங்கியது. இந்த முறை புரிதலோடு கூடிய ஒரு பரஸ்பர தோழமையோடு!
அன்று மாலை…
மொட்டை மாடியில் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்த சரண் தீப்தியின் வீட்டை நன்றாக கவனித்தான். முதன் முதலாக.
ரோஜா வண்ணத் திரைச்சீலை அணிந்த ஒரு ஜன்னல் அழகாக இருந்தது. தீப்தியின் அறையாக இருக்க வேண்டும்.
எப்படி அவள் கவனத்தைப் பெறுவது?
பாடிக் கொண்டிருந்த பாடலைக் கொஞ்சம் சத்தமாகப் பாடினான் சரண்.
அவன் எதிர்பார்த்தபடியே ரோஜா நிற திரைச்சீலை விலகியது. தீப்தி தெரிந்தாள். புன்னகைத்தான்.
“மாடிக்கு வா..” சைகை செய்தான் சரண்.
வந்தாள். கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தோடு.

“கிஃப்ட்டா? எனக்கா?” என்றான் சரண்.
“உனக்குதான். ஆனா நீ எதுக்கு என்னை மாடிக்கு கூப்பிட்டே? அதை சொல்லு முதல்ல.”
சரண் தன் கைகளில் இருந்த அந்த மெடலை அவளின் கழுத்தில் மாட்டினான்.
“பாட்டுப் போட்டியில் ஜெயிச்சதுக்கு கிடைச்ச மெடல். உன்னாலதான் பாடினேன். உன்னாலதான் ஜெயிச்சேன். சோ, மெடல் இஸ் டெடிக்கேட்டட் டு யூ.”
“எங்க ஜெயிச்சே நீ? இரண்டாவது இடம்தானே?”
“மறுபடியுமா? நோ தீப்தி. ப்ளீஸ்..” அங்கலாய்த்தான் சரண்.
சிறு புன்னகையை பூசிக் கொண்டது தீப்தியின் முகம். “பாரு சரண், நீ முதலிடத்தைப் பிடிக்கணும். அதுக்கு நீ முறையா ம்யூசிக் கத்துக்கணும்.”
“ஜோக்கடிக்காதே தீப்தி. இத்தனை வயசுக்கு மேல… நான் பாட்டுக் கத்துக்கிட்டு…”
“கத்துக்கிறதுக்கு வயசில்லை சரண்.”
“ஆர் யூ சீரியஸ் தீப்தி?”
“ரொம்ப ரொம்ப” என்றவள், “உனக்கு நல்லாவேப் பாட வருது. குரல் கேக்கவே வேணாம். அதனால ம்யூயூசிக் கத்துக்கிறது நிச்சயமா உனக்கு சுலபமா இருக்கும்.”
“ஆனா தீப்தி..”
“ஆனா ஆவன்னாவெல்லாம் வேண்டாம்” என்றவள், “உன் போனைக் கொடு”, சரணின் மொபைலை வாங்கியவள் அதில் தன் எண்களை ஒற்றினாள்.
தன் மொபைலை எடுத்து, சரண் எண்ணை அதில் சேமித்தாள்.
உடனேயே சில செய்திகளை அவனுக்கு பார்வேர்டு செய்தாள்.
பார்த்தான் சரண்.
அனைத்தும் இசைப் பள்ளிகளின் விவரங்கள். முகவரிகள்.
“தீப்தி. யூ ஆர் சோ பாஸ்ட்.” என்றான். “ஸோ ஸ்வீட் டூ” என்றான் கூடவே, பிற்சேர்க்கையாக,
“உனக்கு டயாபடீஸ் எதுவும் இல்லியே?” சிரித்தாள் தீப்தி.
“நோ. நாட் அட் ஆல். இருந்தாலும் இன்சுலின் போட்டுக்குவேன். உன்னோட ஸ்வீட் ப்ரென்ஷிப்புக்காக.”
“அட, நீயும் ஸ்வீட்டாதாண்டா பேசுறே?”
“உனக்கும் டயாபடீஸ் எதுவும் இல்லியே?”
இருவரது சிரிப்பலையில் மொட்டை மாடிக் கொஞ்சம் சந்தோஷமானது.
“கிஃப்ட்டை மாறந்துட்டியே?” சரண் நினவு படுத்தினான்.
பரிசு தீப்தியிடமிருந்து சரணிடம் வந்தது.
“இப்ப பிரிக்காதே. நான் போனதும் அப்புறமா பிரிச்சிப் பாரு.”
தீப்தியின் உருவம் மறைந்ததும் பரிசைப் பிரித்தான் சரண்.
ஒரு அழகான மவுத் ஆர்கன்!
கூடவே ஒரு கடிதம்.
“எதிர்கால பீத்தோவனுக்கு பியானோதான் வாங்கித் தரணும். ஏதோ என்னால முடிஞ்சது மவுத் ஆர்கன். உன்னோட இசைப் பயணத்துக்கான பிள்ளையார் சுழியாக என்னோட இந்த சின்னப் பரிசு. வாழ்த்துகள்!”
நாலு வரிகளை நானூறு முறை படித்தான் சரண்.
“அன்புடன் தீப்தி” என்பதை ஆயிரம் முறை வாசித்தான். மனசு மகிழ்ச்சியால் நிறைந்தது.
அவன் வாசித்த மவுத் ஆர்கன் தீப்தி அறையை எட்டியது.
படுகையில் இருந்த அவளைத் தாலாட்டியது.
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.