தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 25

கல்பனா சன்னாசி

அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7 அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9 அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11 அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13 அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15 அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17 அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19 அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21 அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23 அத்தியாயம் - 24

வுத் ஆர்கனுக்குப் பிறகு சரணின் யமஹாவும் தீப்தியின் ஸ்கூட்டியும் முட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டன. மாறாக நன்றாக ஒட்டிக்கொண்டன.

தீப்தி கிளம்பும்போது அவள் வீட்டு வாசலில் இருந்து மூன்று முறை ஹாரனை விட்டு விட்டு அடிப்பாள்.

சரியாக அதற்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சரணின் யமஹா கிளம்பும். கிளம்பிச் சென்று தெரு முனை வளைவில் தீப்தியின் ஸ்கூட்டியோடு ஒட்டிக்கொள்ளும்.

கல்லூரி வளாக பார்க்கிங் பிரதேசத்திற்கு சரண் – தீப்தியின் யமஹா – ஸ்கூட்டி கூட்டணி மிகவும் பிடித்துப் போனது.

சரணின் இசைப் பயணம் சரளியில் தொடங்கி கீர்த்தனைகள் என வளர்ந்தது,

மொட்டை மாடி தவிர, வீட்டு வாசல் வழியாகவும் தீப்தி நுழைந்தாள், சரணின் வீட்டுக்குள்ளும், மனசுக்குள்ளும்.

“லவ்வாடா?” அம்மா கேட்டபோது, “இல்லம்மா. ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்” மழுப்பினான் சரண். தீப்தியின் மனசுக்குள் என்ன இருக்குமோ?

கூட்டுப் புழுவாக அவன் மனதுக்குள் நெளிந்து கொண்டிருந்த அவனது ப்ரியம், அலை கடலோரம் அலை வரிசை பேசி தீப்தி அவள் காதலை சொன்ன தினம், சிறகுகள் வளர்த்து, வண்ணத்துப் பூச்சியானனாது. பளபளவென்று படபடவென்று காதல் பூங்காவில் மகிழ்ச்சியுடன் பறந்தது.

அவன் நினைவுகளை மீட்டெடுத்தது. மொபைலில் ஒலி, ஒரு புதிய செய்தி வந்திருப்பதை அறிவித்தது.

அது, தீப்தி – செல்வாவின் திருமணப் பத்திரிக்கை.

சந்தன நிறப் பின்னணியில் அடர்நீல எழுத்துகள் இருவரின் திருமணத் தேதியை அறிவித்தது. அம்புகளாக மாறி இவன் நெஞ்சைத் துளைத்தது.

இவன் பார்வை பத்திரிக்கையில் தங்கத்தில் மின்னிக் கொண்டிருந்த பூங்கொத்து சித்திரத்தில் நிலைகுத்தி நிற்கையில் மொபைல் மறுபடி சிணுங்கியது, நீளமாக!

செல்வா!

“ஹலோ சரண். பத்திரிக்கை பாத்தீங்களா?”

“ம்.”

“நானே டிசைன் பண்ணினேன். எப்படி இருக்கு?”

“ம். குட்.”

“ஒரு வாழ்த்துகள் கிடையாதா ப்ரோ?”

“வாழ்த்துகள்.”

“கலுயாணத்துக்கு வர்றீங்களா?”

“பாக்கலாம்.”

“என்னது? பாக்க… லாமா? கண்டிப்பா வரணும் நீங்க. வந்தே ஆகணும்.”

சரண் கம்மென்றிருந்தான். உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த எரிமலையை மறைத்துக்கொண்டு.

“மேரேஜ் ரிசப்ஷனுக்கு உங்க கச்சேரிதான், நீங்க வந்துப் பாடணும்.”

“இல்லை. சிரமம். முடியாது.”

“நீங்க வந்தா தீப்தி சந்தோஷப்படுவா.”

“இல்லை. சிரமம். முடியாது.”

“என்ன சரண்? இப்டி டல்லடிக்கிறீங்க? எனக்காக இல்லைன்னாலும், தீப்தி உங்க பெஸ்ட் ப்ஃரெண்ட். அவளுக்காகவாவது ஆரிண்ட் யூ ஹப்பி?”

“ஆமாம். நான் ஹேப்பி. ரொம்ப ஹேப்பி. தீப்தி என் ஃப்ரெண்ட். அவளுக்கு கல்யாணம். அதுவும் தி கிரேட்டல்ஸ்ட் ஜெண்டில் மேன் ஆஃப் தி மில்லினியம், செல்வாவோட. சோ, நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி. ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி. ஹேப்பியோ ஹேப்பி. போதுமா?”

“ஐ திங்க் யூ ஆர் நாட் இன் எ குட் மூட். நான் அப்புறம் பேசுறேன்.”

செல்வா இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

செல்போனைத் தூக்கி கடாசப் போனான் சரண். இடம் கொடுக்காமல் மறுபடியும் சிணுங்கியது அவன் அலைபேசி.

தீப்தி.

எடுக்காமலிருந்தான். மீண்டும் அழைத்தது அலைபேசி. எடுத்தான்.

“இப்ப என்ன உனக்கு?” கோபத்தோடு தொடங்கிய சரணை,

“எனக்கு கல்யாணம். உனக்குப் பொறாமை.” இடைவெட்டினாள் தீப்தி.

“ஹேய் லுக். நீ கல்யாணம் பண்ணிக்கோ. இல்லை காது குத்திக்கோ. ஐ டோண்ட் கேர். புரியுதா?”

“நிச்சயமா உனக்குப் பொறாமைதான்.”

“பொறாமையா? எனக்கா? நீ மட்டும்தான் கல்யாணம் செஞ்சுப்பியா? நானும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.”

“பொண்ணு யாரு?”

“ந … நம்ப ரேணு”

“ரேணுவுக்குப் போன வாரம்தான் கல்யாணம் முடிஞ்சுது. ஜூமில். ஆன்லைனில்.”

“ரேணு. இல்லேன்னா பானு.”

“அதாரு?”

“சிங்கர். கச்சேரியில் எங்கூட பாடுவா. ஸோ க்யூட். தெரியுமா?”

“எப்போ?”

“எது எப்போ?”

“உன் கல்யாணம். உன் க்யூட்டியோட?”

“அ.. அது…”

“எங்கேஜ்மெண்ட் ஆயிடுச்சா?”

“வந்து…”

“வெயிட் பண்றியாக்கும்?”

“எதுக்கு?”

“ரஹ்மான் சார் ம்யூசிக்க்ல் பாட சான்ஸுக்கு?”

“அது…”

“ரஹ்மான் சார் ம்யூசிக்கில் பாடுறது இருக்கட்டும். என் கல்யாணத்தில் ஏன் பாட மாட்டேங்கிற?”

“ஏன் பாடணும்? எதுக்கு பாடணும்? உன் கலயாணத்தில் நான் ஏன் பாடணும்?”

“ஏன் கூடாது? எதுக்கு கூடாது? என் கல்யாணத்தில் நீ ஏன் பாடக் கூடாது?”

சரண் காரணம் தேடினான். தீப்திக்கு பதில் சொல்ல.

அதற்குள் அவள், “அப்ப கண்டிப்பா பொ… றா…..மை… தான்.”

உதட்டை கடித்துக்கொண்டான் சரண், நெற்றியைத் தடவினான்,

பிறகு சொன்னான். “ப்ளைட் டிகெட் புக் பண்ணிட்டு சொல்றேன்.”

“வா ராஜா வா.” என்றாள் தீப்தி.

“எங்க சரண் கிளம்புறே?” அம்மா கேட்டாள்.

“கச்சேரிக்கும்மா”, என்றான் சரண்.

“மூட்டை முடிச்சோடவா?” புருவம் உயர்த்தினார் அப்பா.

“கச்சேரி அமெரிக்காவுலப்பா. ஒரு கல்யாண ப்ரோகிராம்.”

‘“யாரோட கல்யாணம்ப்பா?”

“தீப்தியோடக் கல்யாணம்ப்பா. தீப்தி வெட்ஸ் செல்வா.”

அதிரிச்சியில் உறைந்தார்கள் அம்மாவும் அப்பாவும்.

அந்தப் பன்னாட்டு விமானம் சரணை சுமந்துகொண்டு பறந்தது. சரண் தீப்தியின் ஞாபகங்களை சுமந்துகொண்டு பறந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *