தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 26

கல்பனா சன்னாசி

அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7 அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9 அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11 அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13 அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15 அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17 அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19 அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21 அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23 அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25

திகாலை முடிந்துவிட்டிருந்த ஒரு முற்பகல் பொழுதில் ஜாக்ஸன்வில் விமான நிலையத்தை அடைந்தான் சரண்.

ஒருவரின் முதல் அயல் நாட்டுப் பயணம் தருகிற எந்தவிதமான உற்சாகமும் இன்றியே அமெரிக்கத் தரையைத் தொட்டான் அவன்.

தன்னை வரவேற்க தீப்தி வருவாள் என்று எதிர்பார்த்திருக்க, “ஹலோ சரண், வெல்கம் டு அமெரிக்கா”, என்று ஒலித்த செல்வாவின் குரலில் அவனின் உற்சாகம் மேலும் வடிந்தது.

வழி நெடுக காரை ஓட்டியபடி பேசிக்கொண்டே வந்தான் செல்வா. அவனின் பேச்சை கவனிக்கிற மாதிரியே பாவ்லா செய்து கொண்டே பயணித்தான் சரண்.

அவன் நெஞ்சம் முழுக்க நிறைந்து கிடந்தது என்னவோ தீப்தியை எப்போது பார்ப்போம் என்ற ஆர்வமான எதிர்பார்ப்பு மட்டுமே.

செல்வாவின் அமெரிக்கன் கான்டோ சிறப்பாகவே இருந்தது. மிகப் பெரிய லிவிங் ரூம். ஐலண்டுடன் கூடிய கிச்சன். மூன்று படுக்கை அறைகள் என மிக விசாலமாகவே இருந்தது.

“அது தீப்தி ரூம். இது என்னோடது. நீங்க இந்த ரூமில் தங்கிக்கலாம்.” செல்வா அறிவித்தான்.

தன் லக்கேஜுடன் அந்த மூன்றாவது அறைக்குள் நுழைந்த சரணுக்கு “நல்ல வேளை தீப்தியும் செல்வாவும் தனித்தனி அறைகளில்தான் வாழ்கிறார்கள்” – பெரும் நிம்மதி!

ஆனால் தீப்தியை எப்போது பார்ப்பது? நிலை கொள்ளாமல் தன் அறையை விட்டு வெளியே வந்த சராண், செல்வா காட்டிய தீப்தியின் அறைக் கதவை ஏறிட்டான். சாத்தப்பட்டிருந்தது அது.

சில வினாடிகள் தயக்கத்திற்குப் பிறகு, “தட்டித்தான் பார்ப்போமே?” கதவைத் தட்டினான்.

நாலைந்து முறை கதவைத் தட்டியும் அறைக்குள்ளிருந்து எந்த அரவமும் இல்லை.

மறுபடியும் சரண் கதவைத் தட்டும் முன், “தீப்தி வீட்டில் இல்லை. ஆபீஸுக்குப் போயிருக்கா”, செல்வாவின் குரல் அவனை நிறுத்தியது.

“ஓ” என்று திரும்பிய சரண், “எப்ப வருவா?” செல்வாவை நோக்கி கேள்வியை வீசினான்.

“சொல்ல முடியாது, அவ இஷ்டம்தான்.”

சரணிடமிருந்து மறுபடியும் ஒரு “ஓ”, பேசாமல் தன் அறைக்கு நடந்தான்.

“பிரிட்ஜில் ப்ரோஸன் புட்ஸ் இருக்கு. கிச்சன்லியும் வேணுங்கிறதை குக் பண்ணிக்குங்க. ஃபீல் அட் ஹோம்”, செல்வாவின் வார்த்தைகள் சரணின் செவிகளை மட்டுமே சேர்ந்தன. சிந்தனையோ முழுக்க முழுக்க தீப்தியை தேடிக் கொண்டிருந்தது.

உதடுகள் மட்டும் ஒரு, “தாங்க்யூ”வை உதிர்த்தது. உள்ளமோ தீப்தியின் நினைவுகளால் ததும்பி வழிந்தது.

அறை திரும்பிய அவனுக்குப் பசி ஏதும் வரவில்லை. ஆனால் களைப்பு வந்தது. உறக்கம் வந்து சேர்ந்தது, ஜெட்லாக் வடிவத்தில். அப்படியே தூங்கிவிட்டான்.

மறுபடி அவன் விழித்தபோது உலகம் இருண்டிருந்தது. குறைந்தபட்சம் அறை இருளோ என்றிருந்தது. அலைபேசி வெளிச்சத்தில் சுவிட்சுகளைத் தேடிக் கண்டுபிடித்து தன் சுற்றுப்புறத்தை வெளிச்சமாக்கினான்.

அலைபேசி செல்வாவிடமிருந்து சில பல மிஸ்டு கால்களையும், “சாப்பிட்டாயா?”, “ஏதாவது வேண்டுமா?” என்ற ரீதியில் அவன் அனுப்பியிருந்த சில குறுஞ்செய்திகளையும் காட்டியது.

ஆனால் இவன் தீப்திக்கு அனுப்பியிருந்த செய்திகள் பார்க்கப்படவேயில்லை. அழைத்துதான் பார்ப்போமே என்று இவன் தீப்திக்கு போன் செய்தபோது, அது எடுக்கப்படவேயில்லை. இரண்டொரு ரிங்கிலேயே அழைப்பு துண்டிப்பட்டது. வலித்தது சரணுக்கு.

வேதனையோடு அறையை விட்டு வெளியே வந்தான். யாருமில்லை. அயல் நாட்டில் தனிமை அவனுக்கு. அதுவும் வந்த சில மணி நேரங்களிலேயே.

இருந்தாலும் எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை.

அறைக்கே திரும்பிவிட்டான். மறுபடியும் உறக்கம் அவனைத் தழுவிக்கொண்டது.

தீப்தி இவனைப் பார்த்ததும் ஸ்லோ மோஷனில் இவனை நோக்கி ஓடி வந்தாள். இறுகக் கட்டிக்கொண்டாள். “ஐ லவ் யூ சரண்” இவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.

இவன் அவள் கன்னத்தை வருடி, உதடுகள் நோக்கி குனிந்தான்.

வீறிட்டலறியது அவன் அலைபேசி. “கனவுதானா எல்லாம்?” கண்களை கசக்கியபடி அலைபேசியை அவதானித்தான்.

செல்வாதான்!

அடுத்த அறையிலிருந்துகொண்டு சரணை அலைபேசியில் அழைப்பதுதான் அமெரிக்கா போல!

“ஹாய்” மிக சோம்பலாக ஒலித்தது செல்வாவுக்கான சரணின் ஹாய்.

“கெட் ரெடி சரண். வீ வில் கோ அண்ட் மீட் யுவர் ம்யூசிக் பேண்ட்.”

அலைபேசியை அணைத்தான் சரண். அந்த அவசர அமெரிக்காவிலும் கண்ணாடி ஜன்னல்கள் வழியே தெரிந்த அதிகாலைச் சூரியன் அழகாகவேத் தெரிந்தான்.

குளித்து முடித்த சரண் என்ன உடை உடுத்துவது என்று அதிகம் யோசிக்கவில்லை. தீப்திக்கு பிடித்த அடர் நீல டி-ஷர்ட்டை அணிந்துகொண்டான். அது அவன் ஏற்கனவே தீர்மானித்திருந்த ஒரு விஷயம்.

தயாராகக் கிளம்பி வந்தான் சரண். அவனுக்கு முன்னால் தயாராக இருந்தான் செல்வா. சரணின் கண்களோ செல்வாவைத் தாண்டி தீப்தியின் அறைக் கதவைத் தட்டியது.

“தீப்தி ஸ்டில் இன் ஆபீஸ்” சரண் கேட்காமலே அறிவித்தான் செல்வா.

சரண் அணிந்திருந்த அடர் நீல டி-ஷர்ட் ரொம்பவே வருத்தப்பட்டது.

காதுகளை சிரமப்படுத்திய செல்வாவின் போர் பேச்சுடன் கடந்த அரை மணி நேரக் கார் பயணத்துக்குப் பின், சரணைக் கொண்டுபோய் ம்யூசிக் பேண்ட் முன்னால் நிறுத்தினான் செல்வா.

“ஸீ யூ இன் தி ஈவ்னிங் சரண்” என்று தன் கடமை முடிந்தது என்பது போல் கிளம்பிவிட்டான் செல்வா.

டிரம், கீபோர்ட், கிடார் என ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொருவர் இருந்தனர். மைக்குடன் ஒரு ஒல்லிக்குச்சி இளம்பெண் இருந்தாள் எல்லோரும் கோரஸாக ஒரு ஹாய் சொன்னார்கள் சரணுக்கு.

இசையோடு இசைந்து போவது எளிதாக இருந்தது சரணுக்கு.

அமெரிக்கா வந்து சேர்ந்த பிறகு அவனுக்கு முதன் முதலாகப் பசித்தது.

உடனடியாக சாண்ட்விச், கொஞ்ச நேரத்தில் இருக்குமிடம் வந்து சேர்ந்த பிஸாக்களுடன் ராகங்கள், தாளங்கள், பாடல்கள் என அவன் பசி தணிந்தது.

என்னப் பாடல்கள் பாடலாம் என அந்த இசைக்குழு ஆலோசித்தபோது சரணிடம் எந்த யோசனையும் இல்லை. பட்டியல் அவன் ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒரு விஷயம்.

அவன் (சரண்) பாட வேண்டும் என்று உத்தேசித்திருந்த அத்தனைப் பாடல்களும் தீப்திக்குப் பிரியமானவை.

பாடும்போது குரலும் மனமும் சேர்ந்து உருகியது சரணுக்கு.

“யூ ஆர் ஆவ்சம் மேன்” அனைவரும் பாராட்ட, தீப்தி முதன் முதலாக தன்னை இசைப் பள்ளிக்கு அனுப்பிய ஞாபகம் வந்து சரணை சூழ்ந்தது.

அமெரிக்க மண்ணை மிதித்து கிட்டத்தட்ட ஒரு நாள் முடிந்தும் இன்னும் அவன் தீப்தியை சந்திக்கவில்லை என்னும் மனவாட்டம் அவனை வேதனைப்படுத்தியது.

அவனின் உண்மையான வேதனை அவன் பாடிய காதல் சோகப் பாடல்களை மேலும் உணர்வுபூர்வமாக ஒலிக்கச் செய்தது.

நாள் முடிவில் அவன் பாடிய கடைசிப் பாடலின் முடிவில் செல்வா வந்தான். அவனும், “யூ ஆர் ஆவ்சம் மேன்” என்றான்.

“கம் சரண். கம் ஜான்சி. லெட்ஸ் கோ ஃபார் டின்னர். தீப்தி இஸ் வெயிட்டிங் ஃபார் அஸ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *